சென்னை கோயம்பேட்டை சேர்ந்த 16 வயது சிறுவன் கோடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி எதிரே உள்ள தனியார் கல்லூரியில் இவரது உறவுக்கார பெண் படித்து வருகிறார்.இருவரும் நேற்று வகுப்புகள் முடிந்து லிபர்ட்டி பேருந்து நிறுத்தத்தில் ஏறி வடபழனி பணிமனையில் இறங்கினர்.பேருந்தில் இருவரும் பேசிக் கொண்டே வந்தனர்.
வடபழனி பேருந்து நிலையத்துக்குள் பேருந்து நுழைந்த போது, பின்னால் வந்த மற்றொரு பேருந்தின் டிரைவர் ஏன் இந்த பெண்ணுடன் பேசிக்கொண்டே வருகிறாய் என பள்ளி மாணவரிடம் அதட்டலாக கேட்டுள்ளார்.எனது அத்தை மகளிடம் நான் பேசுகிறேன் நீ யார் மாணவர் பதிலளிக்க, இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர்.
இதில் பேருந்து ஓட்டுநர் விஜயனுக்கு(வாய்) உதடு் கிழிந்து காயம் ஏற்பட்டது.108 ஆம்புலன்ஸ் மூலம் கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓட்டுநரை தாக்கியதை கண்டித்து சிறிது நேரம் சக ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வடபழனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர்களை சமாதானம் செய்தனர். மூன்று நிமிடங்கள் கழித்து வழக்கம் போல் பேருந்துகள் புறப்பட்டு சென்றன.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மாணவர் தரப்பிலும் ஓட்டுநர் தரப்பிலும் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.பின்னர் இரு தரப்பினரும் சமாதானமாக செல்வதாக கூறியதை அடுத்து போலீசார் மேல் நடவடிக்கையை கைவிட்டனர்.