ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை போலீசார் அதிரடி சோதனை. ஆவடி காமராஜ் நகர், நேரு 2 வது தெரு, திருவேற்காடு உள்ளிட்ட பகுதியில் பினாமி ஜோசப் வீட்டில் அமலாக்கத்துறை 5 மணி நேரத்திற்கு மேலாக சோதனை.
சட்டவிரோத பணம் பரிமாற்ற வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கை ஜூலை 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை இந்தியாவுக்கு கடத்தி வந்ததாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் போதை பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறி ஜாபர் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 26ம் தேதி கைது செய்தனர்.
அமலாக்கத்துறை வழக்கில் ஜாபர் சாதிக்கை ஆஜர்படுத்த புழல் சிறை மாற்று வாரண்ட் பிறப்பித்து.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, டெல்லி திஹார் சிறையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஜாபர் சாதிக் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணைக்கு பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருடைய பினாமியான ஆவடி காமராஜ் நகர், நேரு 2 வது தெருவைச் சேர்ந்த ஜோசப் (45), ஆயிஷா (38) என்பவர் வீட்டில் மற்றும் இவர்களது மற்றொரு வீடான திருவேற்காடு சிவன் கோவில் அருகே உள்ள இரண்டு வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜாபர் சாதிகிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் ஜோசப் ஆயிஷா அவர்களின் வங்கி கணக்கிற்கு வந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், தற்பொழுது காலை 6 மணி முதல் கடந்த 6 மணி நேரமாக துப்பாக்கி ஏந்திய 2 மத்திய ரிசர்வ் போலீசார், 4 அமலாக்கத்துறை அதிகாரி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.