நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை ஓட ஓட வெட்டிய கும்பல்
செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடியை வெட்டி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவர் மீது தாம்பரம், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் கொலை, கொலை முயற்சி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் மீது உள்ள வழக்கு ஒன்றுக்காக இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த லோகேஷை ஐந்து பேர் கொண்ட கும்பல் ஓடி ஓடி விரட்டி வெட்டியுள்ளனர்.
நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வந்த லோகேஷை இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஓட ஓட அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் சிக்காத லோகேஷ் நீதிமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு ஓடி உள்ளார். லோகேஷை கொலை செய்ய வந்த கும்பல் லோகேஷ் மீது நாட்டு வெடி குண்டு வீசியதில் 100 மீட்டர் தொலைவில் லோகேஷ் கீழே விழுந்துள்ளார். ஐந்து பேர் கொண்ட கும்பல் லோகேஷை சரமாரியாக வெட்டிவிட்டு ஓடிவிட்டனர்.
தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் லோகேஷை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இதனையடுத்து நீதிமன்றம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு இரும்புலியூரில் கொலை வழக்கில் 2 வது முக்கிய குற்றவாளி லோகேஷ். முதல் குற்றவாளியான பாஸ்கரை ஏற்கனவே கொலை செய்திருந்த நிலையில், இரண்டாது குற்றவாளியான லேகேஷை பழிக்கு பழி தீர்க்கவே இந்த கொலை முயற்சி நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.