அரகண்டநல்லூர் அருகே தற்கொலைக்கு முயன்ற கொலை குற்றவாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணம்பூண்டி பகுதியில் நேற்று வீட்டு வேலை செய்து கொண்டிருந்த சத்யா 35 என்கின்ற பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு காரில் தப்பித்த குற்றவாளி முருகன்(50) விபத்தில் சிக்கி உள்ளார். மேலும், போலீசாரும், பொதுமக்களும் முருகனை சிறை பிடித்தனர். அப்போது கொலை செய்ய பயன்படுத்திய கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு முருகன் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், முருகனை மீட்ட போலீசார் திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த முருகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.