தாயை தவறாக பேசிய நண்பனை தாயின் சேலையாலேயே கழுத்தை நெறித்து வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கழுத்து நெறிக்கப்பட்டு தென்காசி நகரப் பகுதியின் மிக அருகாமையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இரவில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, சின்ன தம்பியின் மீது 6-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வர, அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், அக்கம் பக்கத்தினரிடம் சின்னத்தம்பி உடன் சுற்றித்திரிந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அதே பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்ற லெப்ட் சாகுல் என்பவர் சுற்றி திரிந்தது தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து, அவரின் செல்போன் எண்ணை வைத்து அவரது இருப்பிடம் குறித்து போலீசார் ஆய்வு செய்தபோது, அவர் தென்காசியில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. உடனே விரைந்து சென்ற போலீசார் அவரை பேருந்தில் வைத்து கைது செய்து தென்காசி அழைத்து வந்துள்ளனர்
தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையின் போது லெப்ட் சாகுலுக்கு உடந்தையாக தென்காசி பகுதியை சேர்ந்த முகமது இஸ்மாயில் (23) என்கிற அவரது உறவினரான சித்தி மகன் இருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, சின்னத்தம்பி, சாகுல் தாய் குறித்து தவறாக பேசியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த லெப்ட் சாகுல் சின்னத்தம்பியை அடித்து உதைத்துள்ளார்.
இதில், சின்னத்தம்பி மயக்கம் அடையவே வீட்டிற்கு சென்ற லெப்ட் சாகுல் தனது தாயின் சேலையை சிறிது கிழித்து கொண்டு வந்து முகமது இஸ்மாயிலை உதவிக்கு அழைத்து இருவரும் சேர்ந்து சேலையால் சின்னத்தம்பியின் கழுத்தை நெறித்து கொலை செய்து முள் புதர்க்குள் தூக்கி வீசியது தெரியவந்தது.
குறிப்பாக, கடந்த இரு தினங்களில் தென்காசி, நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், தாயை தவறாக பேசியதால் தாயின் சேலையை வைத்து இளைஞரை கொலை செய்த சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.