சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விவசாயி ஒருவர் பயிரிடுவதற்காக வங்கியில் தங்க நகையை அடமானம் வைத்து பெற்று வந்த 3.60 லட்ச ரூபாய் பணத்தை வாகனத்திலிருந்து வாலிபர் ஒருவர் திருடி சென்றதால் பரபரப்பு.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுக்காவில், நடுப்பட்டி கிராமத்திலுள்ள தளவாய்பட்டி கோம்பையை பகுதியே சேர்ந்தவர் விவசாயி முருகேசன்(48).தற்போது சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், தனது விவசாய நிலத்தில் சாகுபடி செய்வதற்காக நிலத்தை உழவு செய்யும் ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், தனது தோட்டத்தில் சாமந்தி பூ சாகுபடி பயிரிட்டு , சோளம் விதைக்கவும் திட்டமிட்டு , அதற்கு தேவைப்படும் பணத்திற்காக தனது மனைவியின் 10 சவரன் தங்க நகையை தீவட்டிப்பட்டியில் உள்ள இந்தியன் வங்கியில் 3.60 லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்தார்.
இதையடுத்து அந்த பணத்தை , தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டி விட்டு, வாகனத்தை காடையாம்பட்டியில் உள்ள மளிகை கடைக்கு முன்பு நிறுத்திவிட்டு , மளிகை பொருட்கள் வாங்க முருகேசன் , கடைக்குள் சென்றார்.
கடையின் முன்பு வண்டியை நிறுத்தி விட்டு ஞாபக மறதியில் சாவியை எடுக்காமல் வண்டியிலேயே விட்டு விட்டு கடைக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விவசாயி முருகேசனை பின் தொடர்ந்து வந்த இரண்டு வாலிபர்களில் ஒருவர் கடைக்குள் சென்ற முருகேசனை நோட்டமிட , இன்னொரு நபர் செல்போனில் பேசுவது போல முருகேசனின் வாகனத்திற்கு அருகே சென்று பெட்டியில் இருந்த பணத்தை லாவகமாக திருடிக் கொண்டு தனது கூட்டாளியுடன் ஒரே பைக்கில் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்த முருகேசன், தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்டி திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து பார்த்தபோது அதில் இருந்த பணம் காணாவில்லை என்பது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது, அதில் முருகேசனின் வாகனத்தில் இருந்து ஒருவர் பணத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது. பின்னர் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பட்டப்பகலில் நடந்த திருட்டு சம்பவம் காடையாம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாய நிலத்தில் சாகுபடி செய்வதற்காக மனைவியின் நகையை அடமானம் வைத்து பெற்ற பணம் திருட்டுப் போய்விட்டதே என்று விவசாயி முருகேசனின் குடும்பத்தினர் கடும் வேதனை அடைந்துள்ளார்..
இந்நிலையில் தீவட்டிப்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்கள் தேடி வருகின்றனர்.