கடலூர் அருகே ஐ.டி ஊழியர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்குள் வந்து உடலை எரித்த கொடூரர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் அருகே உள்ள காராமணிகுப்பத்தை சேர்ந்தவர் சுகந்த் என்கின்ற சுதன் குமார் (40). ஐடி ஊழியர் ஆன இவர் ஹைதராபாத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் நெல்லிக்குப்பத்தில் உள்ள வீட்டில் சுகந்த்தின் 10 வயது மகன் நிஷாந்தன் பார்த்துக் கொண்டுள்ளார்.
ஐடி துறையில் பணிபுரியும் சுகந்த் 15 நாள்கள் பணிக்கு செல்வதுடன் 15 நாள்கள் வீட்டிலிருந்து பணிபுரிவார். இந்த வகையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அவர் மகன் மற்றும் அம்மாவுடன் வீட்டிலிருந்து பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து புகை வந்ததுடன் துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
நெல்லிக்குப்பம் போலீசார் காராமணிகுப்பம், ஜோதி நகரில் உள்ள சுகந்த் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் வெளியே பூட்டப்பட்டு இருந்தது. பூட்டை உடைத்துக் கொண்டு போலீசார் உள்ளே சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் ஹால் பகுதியில் கமலேஸ்வரி (60) என்ற சுகத்தின் தாயார் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடக்க சுகந்த் மற்றொரு அறையில் எரிக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.
பத்து வயது சிறுவன் நிஷாந்தனும் மற்றொரு அறையில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தனர். கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் சம்பவ இடத்திற்கு வந்தார்.
மேலும் அவருடன் தடவியல் துறையினர், கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அதே நேரத்தில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் வெளியில் விசாரணை மேற்கொண்டிருந்தனர். ஏறத்தாழ 3 மணி நேரம் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் ஆய்வு மேற்கொண்டு நிலையில் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தடவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர். வீட்டின் பல்வேறு இடங்களிலும் ரத்தக் கரைகள் படிந்திருந்தது. மேலும் மூவரும் கொலை செய்து எரித்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சுகந்த் திருமணம் ஆன நிலையில் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரியவந்தது. அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வெள்ளிகிழமை இரவு மூன்று பேரும் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை கொலையாளிகள் மீண்டும் வீட்டிற்குள் புகுந்து மூவரின் உடலையும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளது தெரியவந்தது. இன்று காலை காவல்துறையினர் வீட்டிற்குள் சென்றபோது மூவர் உடலும் எரிந்து கொண்டிருந்தபோது அதனை தண்ணீர் விட்டு அனைத்தனர். இந்த கொடூர கொலைக்கு பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் 5 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இறந்தவர்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட மூன்று செல்போன்கள் மற்றும் அந்த பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். உறவினர்கள் மற்றும் பிரிந்து வாழும் மனைவி என ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.