விழுப்புரத்தில் ரூ.6.5 கோடி மதிப்பிலான யானை தந்தத்தால் ஆன யானை பொம்மைகளை விற்பனை செய்ய முயன்ற 12 பேர் கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.
திருச்சியிலிருந்து ஒரு கும்பல் பழங்காலத்து யானை தந்தத்தால் செய்யப்பட்ட கலைநயமிக்க 4 யானை பொம்மைகளை விற்பனை செய்ய உள்ளதாக தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவுக்கு (சென்னை) ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களை பிடிக்க வனத்துறை சிறப்பு பறக்கும் படையினர் திட்டம் வகுத்து, அந்த கும்பலை பிடிக்க 3 நாட்களாக அவர்களை கண்காணித்து விழுப்புரத்தில், அந்த தந்தத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையை வாங்குவதற்கு ஒரு வியாபாரியை வனத்துறை ரகசியமாக ஏற்பாடு செய்தது.
அவர் மூலம் அந்த கும்பலிடம் நைசாக பேசி, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாலாஜி கெஸ்ட் ஹவுஸ் என்ற இடத்திற்கு வரவழைத்து வியபாரம் பேசுவதுபோல் வனத்துறை ஏற்பாடு செய்த வியபாரி பேசிக் கொண்டிருந்தார். அப்போது, நேற்று மாலை ஒரு பெண் உட்பட 12 பேர் கொண்ட கும்பலை சென்னையை சேர்ந்த வனத்துறை சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவினர், விழுப்புரம் மாவட்ட வனஅலுவலர் சுமேஷ் சோமன் உள்ளிட்ட வனத்துறையினருடன் இணைந்து மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து 6.5 கிலோ எடை கொண்ட யானை தந்ததால் செய்யப்பட்ட 4 யானை பொம்மைகள், 3 இருசக்கர வாகனம், ஒரு கார் பறிமுதல் ஆகியவற்றை பறிமுதல் செய்து, 12 பேரையும் விழுப்புரம் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஈஸ்வரி, கருப்பசாமி, அறந்தாங்கியைச் சேர்ந்த ஜஸ்டிஸ், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜியாகிதீன், ராஜா, பிரபாகரன், சுப்ரமணியன், ராஜ்குமார், பைசல், பார்த்தசாரதி, பல்லடத்தை சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 6.5 கிலோ யானை தந்ததால் ஆன யானை பொம்மைகளின் மதிப்பு சுமார் ரூ.6 கோடி 50 லட்சம் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விழுப்புரம் வட்டாட்சியர் கனிமொழி, வனத்துறை அலுவலகத்தில் அந்த 12 நபர்களிடமும் விசாரணை மேற்கொண்டார். மேலும் யானை பொம்மைகள் எங்கிருந்து வாங்கப்பட்டு விற்க முற்பட்டனர் என்றும், எந்த வருடத்தில் இது செய்யப்பட்டது, எங்கு செய்யப்பட்டது, எத்தனை வருடமாக இந்த கும்பல் இது போன்ற செயலில் ஈடுப்பட்டு வந்தனர் என்பது குறித்து தொடர்ந்து வனத்துறையினர் 12 நபர்களிடமும் விசாரணை செய்து வருகின்றனர். பின்னர் அவர்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். யானைத் தந்ததால் செய்யப்பட்ட யானை பொம்மை விற்பனை கும்பலை வனத்துறையினர் விழுப்புரத்திற்கு வரவைத்து பொடிவைத்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.