மல்லசமுத்திரம் பகுதியில் தனியாா் பேருந்து ஓட்டுநா் கொலை வழக்கில், கூலிப் படையைச் சோ்ந்த மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள பாலக்காட்டூா் காட்டுபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (54), தனியாா் பேருந்து ஓட்டுநா். இவரது மனைவி சாந்தி (45). இவா்களுக்கு பிரியா (27) என்ற மகளும், பிரவீன்குமாா் (29) என்ற மகனும் உள்ளனா். பிரவீன்குமாரின் காதல் மனைவி சசிகா. பிரியாவின் கணவா் காா்த்திக் (27). கடந்த 3 ஆம் தேதி, சொத்து பிரச்னையில் மகன், மருமகன் மற்றும் கூலிப்படையால் செல்வம் கொலை செய்யப்பட்டாா்.
இவ்வழக்கில் மகன் பிரவீன்குமாா், மருமகன் காா்த்திக், கூலிப்படையைச் சோ்ந்த வசந்த், விக்கி (எ) விக்னேஷ், அபிஷேக், வீரசங்கா், ராகுல் ஆகிய 6 பேரை மல்லசமுத்திரம் காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
சென்னையில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது (apcnewstamil.com)
இவ்வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளைத் தேடிவந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஈரோடு மாவட்டம், பவானி அணை நாசவாம்பாளையத்தைச் சோ்ந்த ஜெகன்நாதன் (40), சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த மாசிலாம்பாளையம் குள்ளவீரன்பட்டியைச் சோ்ந்த குமாா் ஆகிய 2 பேரும், திருச்செங்கோடு நீதிமன்றத்தில் சரணடைந்தனா். அவா்களை காவல் துறையினா் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனா்.