காதலுக்கு கண்கள் மட்டுமா? எல்லையே இல்லை என்பார்கள். இணையத்தால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இன்றைய உலகில், தேசம் விட்டு தேசம் கடந்து காதலை வலைவீசி இதயத்தால் ஒன்றுகூட அலைபாய்கிறார்கள் வாலிப வயதினர். காதலின் உந்துதலால் கண்டம் விட்டு கண்டம் தாண்டி, தாய்நாட்டை, உறவுகளை உதறித்தள்ளி காதலரை கரம்பிடிக்க கண்ணை மூடிக் கிளம்பி விடுகிறார்கள் காதல் பறவைகள். ஆனால், அவர்களின் எல்லா பயணங்களும் ஒரு விசித்திரத்தில் முடிவடைவதில்லை. அப்படி ஒரு காதல் கிளி, காதலனை நாடி வந்த இடத்தில் சிறகொடிந்த கிள்ளையாகி தவிக்கிறது.
19 வயது பாகிஸ்தானிய சிறுவனை திருமணம் செய்து கொள்ள பாகிஸ்தானுக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார் 33 வயது அமெரிக்கப் பெண். வந்தவுடன், அவர் ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் எதிர்கொண்டார். 33 வயதான ஒனிசா ஆண்ட்ரூ ராபின்சன், பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது நிடல் அகமது மேனனுடன் ஆன்லைன் காதலை வளர்த்துக் கொண்டார். மேனனை திருமணம் செய்து கொள்ள ஒனிஜா ஆண்ட்ரூ நியூயார்க்கிலிருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு பறக்க முடிவு செய்யும் அளவுக்கு அவர்களின் மெய்நிகர் காதல் ஆழமடைந்தது.
அக்டோபர் 2024ல் ஒனிஜா ஆண்ட்ரூ கராச்சிக்கு வந்தபோது, அகமது மேனனின் குடும்பத்தினர் திருமணத்தை எதிர்த்தனர். ஒனிசா ஆண்ட்ரூ தனது இனத்தை மறைக்க அவரது புகைப்படங்களை ஃபில்டர் செய்து மேனனை ஏமாற்றியதாக கொதித்தனர் அவரது குடும்பத்தினர்.
ஒனிசா ஆண்ட்ரூக்கு இதயமே நொறுங்கிப் போனது. அகமது மேனனின் வீட்டிற்கு வெளியே போராட்டதில் குதித்தார். பாகிஸ்தானிய ஆர்வலரும், யூடியூபருமான ஜாபர் அப்பாஸ் இந்த சம்பவத்தை சமூக ஊடகங்களில் பகிர, பரவலான சீற்றத்தைத் தூண்டியது. சிந்து மாகாண ஆளுநர் கம்ரான் கான் டெசோரி, இதில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒனிசா ஆண்ட்ரூ ராபின்சனுக்கு தனது சொந்த செலவில் அமெரிக்காவிற்கு திரும்புவதற்கான டிக்கெட்டை வழங்கினார்.
ஒனிசா ஆண்ட்ரூ ராபின்சன் உதவி வழங்க மறுத்தார். அதற்கு பதிலாக தனது குறைகளை வெளிப்படுத்தவும் தனது கோரிக்கைகளை எடுத்த்துச் சொல்லவும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அகமது மேனனிடமிருந்து வாரம் தோறும் $3,000 உதவித்தொகையை பெற்றுத்தர வலியுறுத்தினார். பாகிஸ்தான் குடியுரிமை கோரினார். திருமணத்திற்குப் பிறகு அகமது மேனனுடன் துபாய்க்கு குடிபோவதாக கெஞ்சினார். அதோடு முடிவடையவில்லை. அவர் பாகிஸ்தான் அரசிடம் ₹87 லட்சம் பணம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஒனிஜா ஆண்ட்ரூ. அங்கேயே தங்கி அந்நாட்டுக்கு புதிய பேருந்துகள், டாக்ஸிகள் வாங்கி புனரமைக்கவே அந்த தொகையை கோரியதாக தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத ஒரு திருப்பத்தில், அமெரிக்காவில் வசிக்கும் ஒனிசா ஆண்ட்ரூ ராபின்சனின் மகன் ஜெரேமியா ஆண்ட்ரூ ராபின்சன், தனது தாய்க்கு ஏற்கனவே மனநலப் பிரச்சினைகள் இருப்பதாகவும், இருமுனைக் கோளாறால் அவதிப்படுவதாகவும் தெரிவிக்க, இப்போது ஒனிசா ஆண்ட்ரூ ராபின்சன் கராச்சியில் உள்ள ஜின்னா முதுகலை மருத்துவ மையத்தின் மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரை அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஒனிசா ஆண்ட்ரூவுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். சொல்லப்போனால் ஒனிசா ஆண்ட்ரூவுக்கு அகமது மேனன் மகன் வயதுதான்… அட, காதலுக்கு ஏதுங்க வயசு..? எனவும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் கேட்டே விட்டாராம் ஒனிசா ஆண்ட்ரூ..!