இரண்டு குழந்தைகளுக்கு தாயான இளம் பெண், பணத்திற்கு ஆசைப்பட்டு கல்யாண புரோக்கர்களுடன் கைகோர்த்து கம்பம், விருதுநகர், கரூர், ஈரோடு என பல்வேறு பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து நூதன மோசடியில் ஈடுப்பட்ட கும்பல் கைது.
பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த திருமண மோசடி கும்பல் போலீசில் சிக்கியது.
கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (30). இவர் திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்துள்ளார். இதையறிந்த கல்யாண புரோக்கர் ஒருவர், விக்னேஸ்வரனிடம், எனக்கு தேனி மாவட்டத்தில் தெரிந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவரது சித்தியுடன் இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என கேட்டு அவரது புகைப்படங்களை காட்டியுள்ளார்.
இதனை நம்பிய விக்னேஸ்வரன், புரோக்கர் கூறிய, தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த பொன்தேவி (25) என்ற பெண்ணிற்கு 8¾ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய். 2 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி கரூரில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
இதனையடுத்து விக்னேஸ்வரனும், பொன் தேவியும் ராயனூர், பாலாஜி நகரில் தனி வீடு எடுத்து 2 நாட்கள் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். பொன்தேவி, விக்னேஸ்வரனிடம் சிவகாசியில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்று வரலாம் என கூறி, பணம்- நகையுடன் பொன்தேவியும், விக்னேஸ்வரனும் கரூரில் இருந்து சிவகாசிக்கு புறப்பட்டு சென்றனர்.
சிவகாசியில் இறங்கி, ஜவுளிக்கடை சென்று வருவதாக கூறிய பொன்தேவி 8¾ பவுன் நகைகள் மற்றும் ரூபாய். 2 லட்சத்து 50 ஆயிரத்துடன் மாயமானார். இதையடுத்து விக்னேஸ்வரன் தனது மனைவியை காணவில்லை என சிவகாசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து கரூர் தாந்தோன்றி மலை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் 14.04.2023 அன்று மதுரை பேருந்து நிலையத்தில் மோசடி திருமணம் செய்து கொள்ளையடித்த பணத்தை பிரிப்பதில் ஒரு கும்பலிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த மதுரை போலீசார் இவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர்கள் திருமண மோசடி கும்பல் என தெரியவந்துள்ளது.
தேனி கம்பம் பகுதியை சேர்ந்த பொன்தேவி, விருதுநகர் மாவட்டம் நத்தத்துப்பட்டியை சேர்ந்த கல்யாண புரோக்கர்கள் அமிர்தவல்லி (45), விருதுநகர் மாவட்டம் மீனாட்சி நகரை சேர்ந்த பாலமுருகன் (43) ஆகிய மூவம் சேர்ந்து பல இளைஞர்களை ஏமாற்றியது தெரியவந்தது.
இவர்கள் கடந்த வாரத்தில் அவினாசிபாளையத்தை சேர்ந்த இளைஞரை ஏமாற்றி திருமணம் செய்து அவரிடம் இருந்து ரூபாய் 50 ஆயிரம் மோசடி செய்துள்ளனர். இதையடுத்து அந்த இளைஞரை வரவழைத்து விசாரணை மேற்கொண்டதில் எனக்கு எனது பணம் கிடைத்தால் போதும் வழக்கு எதுவும் வேண்டாம் என்று அவரது பணத்தை திருப்பி வாங்கிக் கொண்டு அந்த இளைஞர் சென்றுவிட்டார்.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட மதுரை போலீசார், இவர், தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரை முதல் திருமணம் செய்து இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.
சொகுசான வாழ்க்கை வாழ விரும்பிய பொன்தேவி கணவரைவிட்டு வெளியேறியுள்ளார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் விதவிதமாக வீடியோ எடுத்து பதிவிட்டு பல இளைஞர்களை ஏமாற்றியுள்ளார்.
மேலும் விருதுநகர், கரூர், ஈரோடு என பல இடங்களில் 5 க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஏமாற்றி மோசடி திருமணம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை போலீசார், கடைசியாக, கரூரை சேர்ந்த விக்னேஸ்வரனிடம் 8¾ பவுன் நகைகள் மற்றும் ரூபாய். 2 லட்சத்து 50 ஆயிரத்தை ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக கரூர், தாந்தோன்றிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தாந்தோன்றிமலை போலீசார் மதுரைக்கு சென்று பொன்தேவி, அமிர்தவல்லி, பாலமுருகன் ஆகிய 3 பேரையும் அழைத்து வந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
திருமணம் என்ற போர்வையில், கல்யாண புரோக்கருடன் கைகோர்த்து பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் மற்றும் மோசடி கும்பலின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.