அவிநாசியில், அண்ணன் முறையான பெரியப்பா மகனை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி, தலையை பாழும் கிணற்றில் வீசியும், உடலை மூட்டையில் கட்டி குளத்தில் வீசியும், இதர பாகங்களை வழி நெடுகிலும் வீசிச் சென்ற சித்தப்பா மகன் ரமேஷ் கைது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து கருவலூர் அருகே காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (54). அவிநாசியை அடுத்து அணைப்புதூரில் உள்ள பனியன் கம்பனியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி சித்ரா (42) மற்றும் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஒரே மகனான பிரவீன்குமார் (22) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கோவிந்தசாமி கடந்த 19ம் தேதி மதியம் வீட்டிலிருந்து அவரது தம்பி முறையான அவரது சித்தப்பாவின் மகன் ரமேஷ் வீட்டிற்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. ரமேஷ் தனது வீட்டிற்கு வந்த கோவிந்தசாமி திரும்ப சென்றுவிட்டதாக கூறியுள்ளார். காணாமல் போன தனது தந்தையை கண்டுபிடித்து தர வேண்டும் என அவரது மகன் பிரவீன் குமார் கடந்த 20.02.2025 அன்று அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரது செல்போன் சிக்னல் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகத்தின் பேரில் கடந்த 21-ம் தேதி கோவிந்தசாமியின் சித்தப்பா மகனான ரமேஷ் (43) – ஐ போலீசார் விசாரித்த போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னதை அடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவிநாசி மாமரத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர், தனது வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வரும் மனைவி மற்றும் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் ஒரே மகள் ஆகியோருடன் வசித்து வருகிறார். ரமேஷ், அவிநாசியை அடுத்து அனந்தகிரி பகுதியில் சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் மற்றும் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
அங்கு இவரது பெற்றோர் குருசாமி மற்றும் நவமணி ஆகியோரை தனியாக ஒரு வீட்டில் தங்க வைத்துள்ளார். குருசாமியின் மூத்த மனைவிக்கு ஆனந்தி என ஒரு மகள் உள்ளார். அவர் திருமணமாகி வெளியூரில் வாழ்ந்து வருகிறார். ரமேஷ்யின் பெரியப்பா மகன்தான் கோவிந்தசாமி
ரமேஷின் சகோதரியான ஆனந்திக்கும், ரமேஷுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக கோவிந்தசாமி பல முறை ரமேஷுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இது சம்மந்தமாக பேச கடந்த 19-ம் தேதி மதியம் ரமேஷின் வீட்டிற்கு கோவிந்தசாமியை அழைத்துள்ளார்.அப்போது ரமேஷின் மனைவி, மகள் இருவரும் பள்ளிக்குச் சென்றதால் ரமேஷ் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த கோவிந்தசாமிக்கும், ரமேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், கோவிந்தசாமியை தாக்கி தள்ளிவிட்டதில் சுவரில் மோதி தலையில் பலத்த அடிபட்டு மூக்கில் இரத்தம் வழிய அந்த இடத்திலேயே கோவிந்தசாமி உயிரிழந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ், யாருக்கும் தெரியாமல் கோவிந்தசாமி உடலை மறைக்க முடிவெடுத்து, அவரது உடலை சாக்கில் கட்டி தனது காரில் ஏற்றி, அனந்தகிரியில் உள்ள தனது கோழிப்பண்ணைக்கு கொண்டு சென்றுள்ளார்.அங்கு, இரவு வயதான தனது தாய் தந்தை வீட்டில் தூங்கிய பிறகு, கோழிப்பண்ணை அருகே வைத்து அரிவாளால் தலை, உடல், கைகள் மற்றும் கால்கள் என துண்டு துண்டாக வெட்டி மூன்று மூட்டைகளில் கட்டி, அதை மொபட்டில் வைத்து தூக்கிச்சென்று சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குன்னத்தூர் குளத்தில் கல்லை கட்டி போட்டுள்ளார்.
கோவிந்தசாமியின் செல்போனில் வாட்ஸ் அப் மூலமாக அவரது மகன் பிரவீன்குமாருக்கு கோவிந்தசாமி அனுப்புவது போலவே பல்வேறு கடன் பிரச்சனைகள் இருப்பது போலவும் அந்த பிரச்சனையில் இப்போது வீட்டிற்கு வர முடியாது என்பது போலவும் மெசேஜ் அனுப்பி விட்டுள்ளார்.
சந்தேகமடைந்த பிரவீன்குமார் தனது தந்தையை காணவில்லை என அவிநாசி போலீசில் புகார் அளிக்க வந்த போது ரமேஷும் உடன் வந்து புகார் எழுத உதவுவது போல நாடகமாடியுள்ளார். தனக்கு படபடப்பாகவும், கடுமையான மன அழுத்தமாக இருப்பதாகவும் மேற்கொண்டு எதுவும் கேட்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, 21-ம் தேதி முழுவதும் குன்னத்தூர் குளத்தில் கோவிந்தசாமியின் உடலை அவிநாசி தீயணைப்புத் துறை வீரர்களின் உதவியோடு அவிநாசி போலீசார் தேடி வந்துள்ளனர். ஆனால், உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில், இன்று காலை குன்னத்தூர் அருகே தொரவலூர் குளக் கரையில் ஒரு மூட்டை ஒதுங்கியுள்ளதாகவும், அதில் கடுமையான தூர்நாற்றம் அடிப்பதாகவும் அங்கு மீன்பிடிக்க வந்த சிலர் அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு சென்று அவிநாசி தீயணைப்பு வீரர்கள் உதவியோடு பார்த்த போது, மூட்டையில் உடல் மட்டும் இருப்பது தெரியவந்தது. உடனடியாக, ரமேஷை அழைத்து வந்து அடையாளம் காட்டியதில், அது கோவிந்தசாமியின் உடல் தான் என உறுதி செய்யப்பட்டது. மேலும், மீதமுள்ள இரண்டு மூட்டைகளை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
வெகு நேரமாகியும் மீதமுள்ள இரண்டு மூட்டைகள் கிடைக்காததால், சந்தேகமடைந்த போலீசார் ரமேஷிடம் தீவிரமாக மேற்கொண்ட விசாரணையில், உடல் பாகங்களை மூன்று மூட்டைகளில் கட்டி குளத்தில் வீசியதாக சொன்னது பொய் என்பதும், உடலை மட்டுமே ஒரு மூட்டையில் கட்டி வந்து குளத்தில் வீசியதாகவும், இருட்டில் எந்த குளம் என்பது சரியாக தெரிவில்லை என்றும் கூறியுள்ளார்.
வெட்டிய தலையை தனது தோட்டத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் போட்டதாகவும், மீதமுள்ள கைகள் மற்றும் கால்களை துண்டு துண்டாக வெட்டி குளத்திற்கு செல்லும் வழியில் ஆங்காங்கே ஒவ்வொன்றாக வீசிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் ரமேஷின் தோட்டத்து பாழடைந்த கிணற்றிலிருந்து தலைய மீட்டனர்.சிறிது தூரத்தில் காலின் சிறு பகுதியும் எடுத்தனர். மீதமுள்ள பாகங்களை தேடி வருகின்றனர். அண்ணன் முறையான பெரியப்பா மகனை கொன்று, உடலை கொடூரமாக துண்டு துண்டாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசும் அளவிற்கு வெறித்தனமாக செயல்பட்டதற்கு சொத்து பிரச்சனைதான் காரணமா? வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா? வெட்டப்பட்ட மீதி பாகங்கள் உண்மையாகவே சாலையோரங்களில் வீசப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் ரமேஷை கைது செய்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.