மெத்தனால் பேரல்கள் எங்கே? விஷசாராய வழக்கில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு தாக்கல்
கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இந்த விபரீதத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களை சிபிசிஐடி கைது செய்துள்ளனர். 14 குற்றவாளிகளில் 19 வயது நிரம்பிய மாதேஷ் என்ற நபர் தான் சின்னத்துரைக்கு (மொத்த சாராய வியாபாரி) மெத்தனாலை சப்ளை செய்துள்ளா் என்பது விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், பாண்டிச்சேரி மடுகரை வி.எஸ் நகரைச் சேர்ந்த மாதேஷை கைது செய்தனர்.
மாதேஷ் டிப்ளமோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்து இரண்டு மாதங்களில் படிப்பை தொடராமல் விட்டுவிட்டு குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதற்காக தவறான நபர்களுடன் சகவாசம் வைத்துக் கொண்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் சாராயம் வாங்கி விழுப்புரம் வழியாக கடத்தி வரும் கும்பலுடன் மாதேஷ் அறிமுகமாகியுள்ளார். பின்னர் கள்ளக்குறிச்சி சாராய மொத்த வியாபாரியான சின்னதுரையின் அறிமுகம் கிடைத்துள்ளது. கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடிக்காத மாதேஷ் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சின்னதுரையிடம் பழகி வந்துள்ளார்.
மாதேஷ், சாராயத்தில் மெத்தனாலை கலந்து விற்பனை செய்யலாம் எனவும், தனக்குத் தெரிந்த நபர்கள் மூலம் மெத்தனாலை வாங்கி சப்ளை செய்வதாக சின்னதுரைக்கு ஆசையை தூண்டி இருக்கிறார். அதன்படி, தனக்குத் தெரிந்த நபர்கள் மூலம் சென்னையைச் சேர்ந்த சிவகுமாரின் அறிமுகம் கிடைத்து அவரிடம் இருந்து மெத்தனாலை வாங்கி வந்து சின்னதுரையிடம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தனக்கு கெமிக்கல் பற்றிய அனுபவம் உள்ளது எனக் கூறிய மாதேஷ் அதிகமான மெத்தனாலை கலந்தால் சாராயம் காட்டமாக இருக்கும் எனக்கூறி சின்ன துரையிடம் கூட அதன்படி மெத்தனாலை தண்ணீரில் கலந்து சாராயம் என பாக்கெட் சாராயமாக போட்டு கன்னுக்குட்டி கோவிந்தராஜ் உட்பட வியாபாரிகளுக்கு சப்ளை செய்துள்ளனர்.
அதன்படி, தனக்குத் தெரிந்த நபர்கள் மூலம் ஆந்திரா எல்லைபகுதிகளில் உள்ள செயல்படாத கெமிக்கல் நிறுவனங்கள், சென்னை மாதாவரம் அருகேயுள்ள கெமிக்கல் நிறுவனங்களோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், மாதேஷிற்கு மெத்தனால் சப்ளை செய்த சென்னையைச் சேர்ந்த சிவக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததாகவும், அங்கு பயன்படுத்தப்பட்ட மெத்தனாலை ஒரு லிட்டர் 60 ரூபாய்க்கு சிலரிடம் விற்பனை செய்ததும், மாதேஷ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு அதிகப்படியான பணத்தை அவர் தருவதாக கூறியதால் பேரல்களில் மெத்தனாலை தருவதை வாடிக்கையாக வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 15ஆம் தேதி மாதேஷ் தன்னிடம் இருந்து சக்திவேல் பெயரில் உள்ள GST கணக்கில் தின்னர் என்ற பெயரில் மூன்று பேரல்களில் மெத்தனாலை வாங்கியதாகவும், ஆனால் அவரிடம் முன்னதாகவே ஆறு பேரல்கள் இருந்ததாகவும் அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார். மாதேஷ் 9 பேரல்களில் கொண்டு செல்லப்பட்ட மெத்தனாலை பண்ருட்டியில் உள்ள சக்திவேல் என்பவரிடம் கொடுத்ததாகவும், பின்னர் கதிர் என்பவர் மூலமாக ஜோசப் ராஜா , சின்னதுரை, ஷாகுல் ஹமிது ஆகியோரின் கைக்கு சென்றதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
ஆறு பேரல்கள் விற்பனை செய்த கதிர் மூன்று பேரல்களை கல்வராயன் மலை அருகே பதுக்கி வைத்திருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். உடனடியாக பதுக்கி வைத்திருந்த மூன்று பேரல்கள் மற்றும் கதிருக்கு சொந்தமான கார் ஆகியவற்றை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே மாதேஷ் 6 பேரல்கள் மெத்தனாலை எங்கே வாங்கினார், இதே போல ஆந்திரா மாநிலங்களிலும் பேரல்கள் வாங்கப்பட்டு இருப்பதால் அதை சப்ளை செய்தது எங்கே அல்லது மறைத்து வைத்துள்ளரா என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படிப்பை தொடராமல் பாதியில் விட்டுவிட்டு, கெமிக்கல் பற்றி தனக்கு அனுபவம் உள்ளதாக கூறி குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட மாதேஷின் இந்தப் பேராசையால் இத்தகைய விபரீதம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் மாதேஷையும், சின்னதுரையையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நாளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.