பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்று தருவதாக கூறி இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை முகலிவாக்கம் லலிதாம்பாள் நகரில் வசித்து வருபவர் சரண்யா, அவர் போரூரில் அலுவலகம் வைத்து கட்டுமானத் தொழில் செய்து வருகிறார். அவரிடம் அறிமுகமான ரோகித், அருண்குமார் மற்றும் ஜெயந்தி ஆகியோர் அறிமுகம் ஆகி பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளனர். அதனை நம்பி 89 லட்சம் ரூபாய் சரண்யா கொடுத்துள்ளார். அதேபோன்று மேலும் பலரிடம் ஆசைவார்த்தை கூறி பணம் பெற்றுள்ளனர். அதன்படி சுமதி என்பவரிடம் 1.64 கோடி ரூபாய் பெற்றுள்ளனர். மேலும் 60 பேரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு தலைமறைவாகி உள்ளனர்.
இதுகுறித்து சரண்யா கேட்டபோது அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி காவல் ஆணையர் உத்தரவு படி ஆய்வாளர் கீதா விசாரணை நடத்தியதில் கோவை மாவட்டம், பெரிய நாயக்கன் பாளையத்தை சேர்ந்த ஜெயந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மோசடியில் ஈடுபட்ட இருவரை தேடி வருகின்றனர்..