வெளிநாட்டில் வேலை என கூறி 3400-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்குமேல் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1 லேப்டாப், 64 ஏடிஎம் கார்டுகள், ரூ.41 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். வெளிநாட்டில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து பேஸ்புக்கில் தேடியுள்ளார். அப்போது அதில் வந்த ஒரு விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மறுமுனையில் பேசியவர் தன்னை ஒரு நிறுவனத்தின் நிர்வாகியாக அறிமுகப்படுத்திக் கொண்டு கனடாவில் வேலை தருவதாகவும், அதற்காக விசா, மருத்துவ பரிசோதனை, இன்சூரன்ஸ் போன்றவற்றுக்கு பணம் டெபாசிட் செய்யதால் வேலை உறுதியாக கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து ரமேஷ்குமாரிடம் இருந்து ரூ.17,71,000 பணத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். ஆனால் அவர் கூறியபடி வேலை எதுவும் வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ரமேஷ்குமார் இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் சீனியர் எஸ்பி கலைவாணன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோசடி நபரை கண்டறிய கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு நவீன முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களது வங்கி பரிவர்த்தனைகள், டெலிகிராம், வாட்ஸ்அப் தொடர்புகள், இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர்.
தனிப்படை அமைக்கப்பட்டு மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா சென்று தீவிரமாக தேடினர். இதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுபம் ஷர்மா(29) அவரது கூட்டாளிகளான பீகார் தீபக்குமார்(28), உத்திரபிரதேஷ் ராஜ்கவுண்ட்(23), மத்திய பிரதேஷ் நீரஜ் குர்ஜார்(28) ஆகியோர் இந்த மோசடிகளில் ஈடுபட்டனர் என்பதும், பெங்களுருவில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பெங்களூர் விரைந்த தனிப்படையினர் அங்கு சுபம் ஷர்மா உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் 4 பேரும் கூட்டாக சேர்ந்து இந்தியா முழுவதும் 3400-க்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியிருப்பதும், அவர்களை கர்நாடகா, தமிழகம், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், டெல்லி, அசாம், தெலுங்கானா, உத்தரகாண்ட் ஆகிய 9 மாநில போலீஸார் தேடி வருவதும் தெரிந்தது.
சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்- காரணம் என்ன?
மேலும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த அசாம் கான் என்பவரது தலைமையின் கீழ் சுபம் ஷர்மா உள்ளிட்டோர் தனிக்குழுக்களாக இருந்து 3400-க்கு மேற்பட்ட ஏமாற்றி சுமார் ரூ.200 கோடிக்கு மேல் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.
பலரிடம் சுமார் ரூ.6 கோடி வரை ஏமாற்ற வேண்டும் என்று குறிக்கோள் எடுத்து அவர்களை எப்படி, எவ்வாறு ஏமாற்றுவது, அவர்களிடமிருந்து எவ்வளவு பணத்தை கேட்க வேண்டும், எந்த வங்கி கணக்குகள் கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக நன்கு திட்டமிட்டு அதற்கென தனி ஜார்ட் போட்டும் ஏமாற்றியுள்ளனர்.
மோசடி செய்யும் பணத்தில் 50 சதவீத கமிஷன் தொகையை அசாம் கானிடம் இருந்து இந்த கும்பல் பெற்று வந்துள்ளனர். அந்த பணத்தை கொண்டு அவர்கள் சுமார் ரூ.22 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் மற்றும் ரூ.1.16 கோடி மதிப்பிலான பிளாட் ஒன்றினையும் புக் செய்து அதற்கு முன்பணமாக ரூ.12 லட்சம் டெபாசிட் செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்ததாக சைபர் கிரைம் போலீஸார் தரப்பில் குறிப்பிட்டனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 21 செல்போன்கள், 2 பாஸ்போர்ட், 42 சிம்கார்டுகள், 1 லேப்டாப், 64 ஏடிஎம் கார்டுகள், ரூ.41 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.