பரதம், கரகத்துடன் புத்தக விழா வாசகர்கள் உற்சாகம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பரதம், கரகாட்டம், கோலாட்டத்துடன் தொடங்கிய புத்தகக் காட்சி திருவிழா களைகட்டியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 4வது புத்தக திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் கி.ரா. நினைவரங்கத்தில் தொடங்கியது. மே 11ம் தேதி வரை நடைபெறும் புத்தகக்காட்சியில் மே 1 முதல் நெய்தல் கலை விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சொற்பொழிவுகள், கரிசல் இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் நாளில் புத்தகக் கண்காட்சி மற்றும் நெய்தல் கலை விழா நடைபெற்றது. கல்லூரி மாணவ மாணவிகளின் பரதம், கரகாட்டம், கோலாட்டம் என கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் புத்தக காட்சியில் இடம் பெற்றிருந்த புத்தகங்களை பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
விழாவிற்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமை வகித்தார். சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவி கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோர் விழாவினை தொடங்கி வைத்தனர். இதில் கோவில்பட்டி தாசில்தார் சுசீலா, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.