காதல் தொல்லையால் கழுத்தை அறுப்பு
கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் மாணவனின் கழுத்தை அறுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவனின் உறவினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கிருஷ்ணகிரி சின்ன மட்டாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்ன திருப்பதி என்பவர் அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் இவரது தங்கையும் படித்து வருகிறார்.
இந்நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் லிங்கேஸ்வரன் என்ற மாணவன் திருப்பதியின் தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த லிங்கேஸ்வரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சின்ன திருப்பதியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த சின்ன திருப்பதியை அங்கிருந்த மாணவர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லிங்கேஸ்வரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி சின்ன திருப்பதியின் உறவினர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.