திருவள்ளூரில் கொய்யாப்பழம் ஜூஸுக்கு விலையை விட ரூபாய் 18 கூடுதலாக வசூல் செய்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 15,000 இழப்பீடு வழங்க வேண்டும் என சூப்பர் மார்க்கெட்டுக்கு திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் அடுத்த காக்களுர் ஆஞ்சநேயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் கடந்த பிப்பிரவரி மாதம் 25 ந் தேதி திருவள்ளூர் வடக்கு ராஜவீதி தெருவில் உள்ள அலிஸ் சூப்பர் மார்க்கெட்டில் பாட்டிலில் அடைக்கப்பட்ட கொய்யாப்பழம் ஜூஸ் வாங்கியுள்ளார்.
அந்த ஜூஸ் பாட்டில் எம்.ஆர்.பி விலை 125 இருந்த நிலையில் ஆனால் அவரிடம் 143 ரூபாய் என 18 ரூபாய் கூடுதலாக வசூலித்துள்ளனர். இதனால் மார்க்கெட் மேலாளரிடம் கேட்டதற்கும் முறையான பதில் அளிக்காததால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் எம்ஆர்பி விட கூடுதலாக வசூல் செய்த 18 ரூபாய் அளித்திட கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதற்கும் எந்தவித பதிலும் அளிக்காமல் அலிஸ் சூப்பர் மார்க்கெட் அலட்சியமாக இருந்து வந்துள்ளது . இதனால் பாதிக்கப்பட்ட நபர் திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் கொய்யாப்பழம் ஜூஸ் எம்ஆர்பி விலை விட கூடுதலாக வசூலித்ததற்கான ஜி பே மூலமாக பெற்றதற்கான தொகை விவரம் மற்றும் பாட்டில் எம்ஆர்பி ஜெராக்ஸ் நகல் வைத்து 3.50 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு அலீஸ் சூப்பர் மார்க்கெட் மீது வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்ற தலைவர் லதா மகேஸ்வரி எம் ஆர் பி விலைப்பட்டியல் விட கூடுதலாக வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்த18 ரூபாய் திருப்பி அளித்திடவும் மற்றும் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு 10000 ரூபாயும் வழக்கு செலவிற்கு 5000 ரூபாய் என மொத்தமாக 15000 இழப்பீடு வழங்கிட அலிஸ் சூப்பர் மார்க்கெட்டிற்கு திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.