திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
நடுக்கல்லூர் உள்ளிட்ட நான்கு இடங்களிலும் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் மற்றும் கிரெடன்ஸ் தனியார் மருத்துவமனை கழிவுகள் தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கான மருந்து குப்பிகள், சிரிஞ்சுகள், ரத்த சாம்பிள்கள், ஆவணங்களை திருநெல்வேலி மாவட்ட அதிகாரிகள் சேகரித்து பசுமை தீர்ப்பாயத்திடம் ஒப்படைத்து விட்டனர்.
எனவே பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி இன்று கேரள மாநில மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் , கேரள சுகாதாரத்துறை அலுவலர்கள்,திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் உட்பட 10 பேர் கொண்ட கேரள அரசின் அதிகாரிகள் குழு நெல்லை மாவட்டத்தில் குப்பைகள் கொட்டப்பட்ட மூன்று இடங்களிலும் தற்போது நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
அவர்களும் மருத்துவ கழிவுகளில் சாம்பல்கள் ஆவணங்களை சேகரித்து வருகின்றனர். இது குறித்து முறைப்படி கேரளா அரசுக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அதனை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.