என்.கே.மூர்த்தி
தமிழ்நாட்டில் எத்தனையோ ஆளுநர்கள் இதுவரை வந்திருக்கிறார்கள், சென்றிருக்கிறார்கள். மக்களுக்கு அவர்கள் எல்லோர் மீதும் இல்லாத கோபமும்,எதிர்ப்பும், வெறுப்பும் தற்போது பதவியில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியின் மீது மட்டும் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து தமிழ் மண்ணிற்கும்,மக்களுக்கும் எதிராக ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்தினார். தமிழர்களையும், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசாங்கத்தையும் தொடர்ந்து இழிவுப்படுத்தி வந்தார்.
ஒவ்வொரு நாளும் புதிய புதிய சர்ச்சைகளை உருவாக்குவதை வேலைத் திட்டமாக வைத்திருந்தார்.
தமிழ்நாடு 1968 முதல் இருமொழி கொள்கையை பின்பற்றி வருகிறது. அடிப்படை கல்விக்கு தாய்மொழியும், உலகத்தை தொடர்புகொள்ள ஆங்கிலமும் போதும் என்று இருமொழி கொள்கையை பின்பற்றி வருவதால் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் வளர்ந்திருக்கிறோம். இருமொழி கொள்கையில் படித்தவர்கள் உலகம் முழுவதும் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்து வருகிறார்கள்.
அதை ஆளுநர் ஆர்.என்.ரவி தவறான கல்வி கொள்கை என்று விமர்சனம் செய்கிறார். தமிழ்நாடு பின்தங்கி இருக்கிறது என்று ஒரு பொய்யை பரப்பினார். மேலும் தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்றால் கூடுதலாக இந்தியும் படிக்க வேண்டும் என்று நிர்பந்தப் படுத்தி, அதை விவாதமாக மாற்றினார்.
அதற்கு அடுத்து திருவள்ளுவர், வள்ளலார், பாரதியார் போன்ற அறிஞர்கள் சனாதனத்தை பின்பற்றியவர்கள், தமிழ்நாடு சனாதனத்தை பின்பற்றுகிற ஆன்மீக மண் என்று புதிய சர்ச்சையை கிளப்பினார். திராவிடம் காலாவதியாகி விட்டது. தமிழ்நாடு திராவிடத்தினால் வளரவில்லை. சனாதனத்தினால் தான் வளர்ந்தது என்று ஆர்.என்.ரவி மீண்டும் ஒரு பொய் மூட்டையை அவிழ்த்து விட்டார்.
அதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய் என்றார். அதை ஒழிக்கும் வரை போராட வேண்டும் என்று துணிந்து பேசினார். அவருடைய இந்த பேச்சு உலகம் முழுவதும் வைரலானது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்கலாம் என்று ஆர்.என்.ரவி மேலும் ஒரு சர்ச்சையை உருவாக்கினார். தமிழ்நாடு லோகோவை கூட பயன்படுத்த மறுத்தார். தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் ஒருசேர சமூக வலைத்தளங்களில் கழுவி கழுவி ஊற்றியதால், ஒருவழியாக அவர் கருத்தை அவரே மாற்றிக்கொண்டு தமிழ்நாடு என்று எழுதத் தொடங்கினார்.

அது அடங்கி முடிவதற்குள் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடும்போது “திராவிட நல் திருநாடும்” என்கிற வரியை பாடமறுத்து ஒரு சலசலப்பை ஏற்படுத்தினார். அரசு நிகழ்ச்சியில் முதலில் தேசிய கீதமும், அடுத்தது தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடவேண்டும் என்று புதிய வழிமுறையை உருவாக்க முயற்சித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலில் தேசிய கீதம் பாடவேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாக அடம்பிடித்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தின் மரபுகளை சிதைக்க சித்தமானார். அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் சிங்கம் போன்று சீற்றம் கொண்டார். உடனே வேகமாக எழுந்து வெளியேறினார்.
அடுத்தது ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள திராவிடம், கலைஞர், அண்ணா, பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களின் பெயர்களை வாசிக்காமல் தவிர்த்தார். அதை சபாநாயகர் தமிழில் வாசித்து தலைவர்களின் பெயர்களை அவை குறிப்பில் இடம்பெற செய்தார். ஆளுநர் ரவி அவையில் இருந்து எழுந்து வேகமாக வெளியேறினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்திற்குள் வருவதும், எதிர் கட்சி உறுப்பினர்களைப் போன்று வந்த வேகத்தில் வெளியேறுவதையும் சிறிதும் வெட்கப்படாமல் செய்து வந்தார்.
தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று துடித்தார், முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். ஒருவரை அமைச்சர் பதவியில் சேர்ப்பதும், நீக்குவதும் முதலமைச்சருக்கு உள்ள அதிகாரம். அது ஆளுநருக்கு தெரியவில்லை என்பது அதிசயம். ஆனாலும் முயற்சி செய்து பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக அவரே அறிவித்து எல்லோரையும் சிரிக்க வைத்தார்.
அவருக்குள்ள அதிகார எல்லையை மீறி, சந்திரமுகியாக மாறி அந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்படி, அவர் அறிவித்த அந்த உத்தரவை ஐந்து மணி நேரத்தில் அவரே ரத்து செய்தார். இந்த நிகழ்விற்குக் கூட அவர் வெட்கப்பட வில்லை. உடனே அடுத்த நாள் திருவள்ளுவருக்கு காவி சாயம் அடித்து அடுத்த விவாதத்தை தொடங்கி வைத்தார்.

அதற்கு அடுத்து சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மாவட்ட நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அதனால் அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதவி இயல்பாகவே பறிபோனது. அவர் உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டியதால் அந்த தண்டனை ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதவி திரும்பப்பெறப்பட்டது. அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவியை முதலமைச்சர் வழங்கினார்.
ஆனால் ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைக்காமல் டெல்லிக்கு சென்றுவிட்டார். ஒரு வாரத்திற்கு மேல் கால தாமதம் செய்தார். அமைச்சர் பொன்முடி மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு சென்றார். உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சந்திர சூட், தனது தீர்ப்பில் ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஆளுநர் நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டு வரலாறு படைத்தார்.
இப்படி ஒவ்வொரு செயலாக செய்வது, ஒரு சர்ச்சையை ஏற்படுத்துவது, அதை இரண்டு மூன்று நாட்கள் விவாதமாக மாற்றுவது, அது தவறு என்றும், சட்டப்படி குற்றம் என்றும் பலர் கண்டிப்பார்கள். அதன் பின்னர் அவர் கருத்தில் இருந்து பின்வாங்கிக் கொள்வார். அதற்கு துளியும் வெட்கப்பட மாட்டார்.
அதேபோன்று நீதிமன்றம் கடந்த நான்கு ஆண்டுகளில் பலமுறை கண்டித்திருக்கிறது மன்னிப்பு கேட்டார். தற்போது மிகக்கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கண்டித்திருக்கிறது.அதற்காக அவர் துளியளவு வெட்கப்பட்டதாகவோ , வருத்தப்பட்டதாகவோ தெரியவில்லை. அப்படி எதிர்பார்க்கவும் கூடாது.
அதற்கு தந்தை பெரியார் சொல்கிறார் மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடுவதை விட மானமற்ற ஒருவனிடம் போராடுவது மிகவும் கடினம் என்கிறார்.