நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் கார்த்திக் நடித்து வெளியான திரைப்படம் அநேகன். இந்தப் படத்தில் கார்த்திக் தான் நடத்தும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஐடி ஊழியர்கள் சிறப்பாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக தெரிந்தும் தெரியாமலும் பலருக்கு போதை பொருள் பயன்படுத்தி வேலை செய்வது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
அது போன்று சென்னையில் இரவு நேரத்தில் வேலை பார்க்கும் ஐடி ஊழியர்கள் நீண்ட நேரம் கண் முழித்து வேலை பார்ப்பதற்கும், சிறப்பான முறையில் வேலை பார்ப்பதற்கும் போதைப் பொருளை பயன்படுத்தி வேலை செய்து வரும் அதிர்ச்சியான தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்யும் நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை துரைப்பாக்கத்தில் 200 அடி சாலையில் சென்னை ஒன் என்ற இடத்தில் பல ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இரவு நேரத்தில் ஐடி ஊழியர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் பொழுது அகரம் பகுதியைச் சேர்ந்த தேவநாதன் என்பவரை போதைப்பொருளுடன் பிடித்து விசாரணை செய்துள்ளனர். தனக்கு செம்மஞ்சேரி பகுதியில் பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் மூலம் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். ராஜேஷை பிடித்து விசாரிக்கும் பொழுது, வேளச்சேரியில் வசிக்கும் ஐடி ஊழியர் ஆலன் சிக்கி உள்ளார். இவர் மூலம் துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனங்கள் செயல்படும் சென்னை ஒன் என்ற இடத்தில் வேலை பார்க்கும் லோகேஷிடம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இப்படி ஒவ்வொருவரிடம் விசாரணை நடத்தியதில் கைதான ராஜேஷ் மெத்தப்பட்டமைன் மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. ஒரு மாத்திரை 2 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் வாங்கி 2500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இதில் சிக்கிய ஆலன் பெங்களூரில் படித்து வந்த காரணத்தினால் நண்பர்கள் மூலமாக போதை பொருளை கொரியர் மூலம் பெறுவதாகவும் அடிக்கடி பெங்களூருக்கு சென்று போதைப் பொருளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இவர்கள் மூலமாக தேவநாதன் மற்றும் லோகேஷ் ஆகியோருக்கு போதை பொருள் சப்ளை செய்யப்பட்டுள்ளது.
லோகேஷ் சென்னை ஒன் நிறுவனத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து உள்ளே இருக்கும் ஐடி ஊழியர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக தெரியவந்துள்ளது. போலீசார் போதைப்பொருள் வேண்டும் என்று நாடகமாடி கேட்கும்பொழுது ஐடி நிறுவனத்திற்கு உள்ளே இருந்தே போதைப்பொருள் எடுத்து வந்து விற்பனை செய்து வந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது. எம்டிஎம்ஏ மாத்திரைகள் 10 மற்றும் மெத்தப்பட்டமைன் 5 கிராம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் வேலை பார்க்கும் ஐடி ஊழியர்கள் சிறப்பாக வேலை செய்வதற்கு இது போன்று போதைப் பொருட்களை போதை மாத்திரைகளை பொடி பொடியாக மாற்றி மூக்கின் வழியே உறிஞ்சி போதை பொருளை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இதுபோன்று ஐடி ஊழியர்கள் போதை பொருளை பயன்படுத்தி வேலை பார்க்கும் பொழுது தூங்காமல் நீண்ட நேரம் கண்விழித்து வேலை பார்க்கலாம் என்ற அடிப்படையில் இந்த போதைக்கு அடிமையாக இருப்பது விசாரணையில் அதிர்ச்சியான தகவலாக வெளியாகி உள்ளது.