Homeசெய்திகள்தலையங்கம்ஆவின் பால் விலை மேலும் உயர்வா? - மக்களின் மீது பொருளாதார தாக்குதல்

ஆவின் பால் விலை மேலும் உயர்வா? – மக்களின் மீது பொருளாதார தாக்குதல்

-

“குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் இல்லையா, ஆவின் பால் கொடுங்கள்” என்று மருத்துவர்கள் நம்பிக்கையோடு பரிந்துரைக்கும் அளவிற்கு புகழ் பெற்றது ஆவின் பால். பல லட்சம் குழந்தைகளுக்கு தாய்பாலாகவும், உயிராதாரமாகவும் இருக்கும் ஆவின் பாலின் விலை நேரடியாக ப்ரிமியம் பால் லிட்டருக்கு 12 ரூபாய் விலை உயர்த்தி 60 ரூபாய் என்றும், கமர்சியல் பால் பாக்கெட் அரை லிட்டர் 34 ரூபாய் என்ற விலையை உயர்த்தி ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பொருளாதார இடியை இறக்கியுள்ளது மாநில அரசு.

இதை வெறும் பால் விலை உயர்வு என்று நினைத்து கடந்து போக முடியாது. பால் விலை உயர்ந்தால் சாதாரண மக்கள் பசியாறும் டீ யின் விலை உயரும். தயிர், மோர், நெய், ஐஸ் கிரீம் என்று அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து மக்களின் வாழ்க்கையில் நெருக்கடியை ஏற்படுத்தும்.

குழந்தைகளுக்கு தாய்மார்கள் கொடுக்க வேண்டிய பாலை ஆவின் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி மனசாட்சியே இல்லாமல் தண்ணீரை கலந்து கோடி கோடியாக கொள்ளையடித்தார். அதிமுக அரசு பத்தாண்டு காலத்தில் ஆவின் நிர்வாகத்தை சீர் குலைத்து விட்டது.

அதனை சீர் படுத்தவும், எல்லோரும் எதிர்பார்த்த நேர்மையான நிர்வாகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்று மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்தனர்.

2021 மே மாதம் 7 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான்” என்று சொல்லி முதலமைச்சர் ஸ்டாலின் பதவி ஏற்கும் போது, அந்த காட்சியை தொலைக் காட்சியில் பார்த்த மக்கள் மகிழ்ந்தார்கள், ஆராவாரம் செய்தார்கள். மக்கள் எதிர்பார்த்தப்படி பதவி ஏற்றுக்கொண்ட அன்று சில கோப்புகளில் கையெழுத்திட்டு மக்களை மேலும் மகிழ்வித்தார்.

முதல் கையெழுத்து பால் விலை குறைப்பு

ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டு தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தினமும் சுமார் ஒரு கோடி பேர் பயன்படுத்தக் கூடிய பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் குறைத்து முதல் கையெழுத்திட்டார்.

அதன்படி சமன் படுத்தப்பட்ட பால் (NICE) அரை லிட்டரின் விலை 20 ரூபாயில் இருந்து 18.50 ரூபாயாக ஆக குறைக்கப்பட்டது.

இருமுறை சமன் படுத்தப்பட்ட பால் (DIET) ரூபாய் 19.50 ல் இருந்து 18 ரூபாய் என்று குறைக்கப்பட்டது.

அதேபோல் நிலைபடுத்தப்பட்ட பால் (GREEN MAGIC) அரை லிட்டர் 22.50 ரூபாயில் இருந்து 21 ரூபாய் என்று குறைக்கப்பட்டது.

நிறை கொழுப்பு பால் (PREMIUM) அரை லிட்டரின் விலை 24.50 ரூபாயில் இருந்து 23 ரூபாய்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த பால் விலைகள் குறைக்கப்பட்டதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

முதலமைச்சருக்கு கிடைத்த பாராட்டுகளையும், புகழ்ச்சிகளையும் ஒரு வருடங்கள் கூட நீடிக்க விடாமல் மீண்டும் பால் விலையை பலமடங்கு உயர்த்தி மக்களின் வாயில் பாலை ஊற்றிவிட்டார் அந்தத் துறை அமைச்சர் சா.மு.நாசர்.

முதலமைச்சருக்கு கிடைத்த பாராட்டுகளையும், புகழ்ச்சிகளையும் ஒரு வருடங்கள் கூட நீடிக்க விடாமல் மீண்டும் பால் விலையை பலமடங்கு உயர்த்தி மக்களின் வாயில் பாலை ஊற்றிவிட்டார் அந்தத் துறை அமைச்சர் சா.மு.நாசர்.
அமைச்சர் சா.மு.நாசர்

விலை உயர்வு ஏன்?

கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பால் உற்பத்தியாளர்களுக்கு 5 ரூபாய் கூடுதலாக கொடுப்பதால் தான் ஆவின் பால் விலை 10 ரூபாய் உயர்த்தியதாக அன்றைய அதிமுக அரசு நியாயம் கற்பித்தது. அதேபோல் தற்போது பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 3 ரூபாய் கொடுக்கிறோம் என்றும் அதனால் PREMIUM பாலுக்கு 12 ரூபாய் உயர்த்தி இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். மேலும்  மக்கள் பயன்படுத்தக்கூடிய NICE, DIET, GREEN MAGIC போன்ற பால்களின் விலை உயர்தப்படவில்லை. வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பால் PREMIUM விலை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அறிவிக்கப்படாத விலை உயர்வு…

தற்போது TEA MATE, COMMERCIAL  ஆகிய இரண்டும் தரம் உயர்ந்த பால் என்று அரை லிட்டர் 34 ரூபாயிக்கு ஆவின் கடைகளில் விற்கப்படுகிறது.

தற்போது TEA MATE, COMMERCIAL  ஆகிய இரண்டும் தரம் உயர்ந்த பால் என்று அரை லிட்டர் 34 ரூபாயிக்கு ஆவின் கடைகளில் விற்கப்படுகிறது.
TEA MATE

மற்ற மாநிலங்கள் மற்றும் தனியார் பால் நிறுவனங்களை விட ஆவின் பால் 10 ரூபாய் விலை குறைவாகவே விற்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் TEA MATE, COMMERCIAL  ஆகிய பால்களை சத்தமில்லாமல் 68 ரூபாய் வரை உயர்த்தி தனியார் பால் நிறுவனத்தின் விலையை சமப்படுத்தியுள்ளது ஆவின் நிறுவனம்.

ஆவின் நிர்வாகத்தின் நோக்கம்

விவசாய தொழிலில் கால்நடை வளர்ப்பு என்பது பிரிக்க முடியாத ஒன்று. அந்த விவசாயிகள் எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக அவர்கள் உற்பத்தி செய்கின்ற பாலை அரசே நேரடியாக கொள்முதல் செய்து, அதை பதப்படுத்தி மக்களுக்கு தரமாகவும், குறைந்த விலையிலும் கொடுப்பதற்காக 1981 ல் தொடங்கப் பட்டதுதான் ஆவின் நிறுவனம்.

1991 ஆம் ஆண்டிற்கு பின்னர் உருவான தனியார் பால் நிறுவனங்கள் ஆவினுடன் போட்டிப்போட முடியாமல் விழி பிதுங்கி நின்றது. அந்த காலக் கட்டத்தில் விவசாயிகளுக்கு மலிவு விலையில் வழங்கி வந்த மாட்டு தீவனம், பருத்திக் கொட்டையை ஆவின் நிறுவனம் நிறுத்தியது. மேலும் பாலுக்குறிய பணத்தை தராமல் மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் இழுத்தடித்து விவசாயிகளை நோகடித்தார்கள். தொடர்ந்து நட்டமடைந்த விவசாயிகள் வேறு வழியில்லாமல் தனியார் பால் நிறுவனங்களை நோக்கி சென்றார்கள். இப்படித்தான் ஹெரிடேஜ், ஆரோக்கியா, திருமலா, கெவின்ஸ் போன்ற தனியார் கம்பெனிகள் அரசின் உதவியோடு வளர்ந்தது. தற்போது அமைச்சர் நாசரின் நிர்வாகத்தால் மீண்டும் தனியார் பால் நிறுவனங்கள் அதிக லாபத்தில் கொழுக்கப் போகிறது.

ஹெரிடேஜ், ஆரோக்கியா, திருமலா, கெவின்ஸ் போன்ற தனியார் கம்பெனிகள் அரசின் உதவியோடு வளர்ந்தது.
PREMIUM

எப்படி?

ஆவின் பால் தனியார் நிறுவனங்களோடு ஒப்பீட்டு செய்து விலையை உயர்த்தி உள்ளது. தற்போது தனியார் பாலுக்கும் ஆவின் பாலுக்கும் பெரிதாக விலை வித்தியாசம் எதுவும் இல்லை. மேலும் விலை ஏற்றம் இல்லை என்று சொல்லக் கூடிய NICE, DIET, GREEN MAGIC போன்ற பால் வகைகள் பல கடைகளில் தற்போது கிடைப்பதில்லை. படிப்படியாக காலப்போக்கில் அதன் உற்பத்தியை குறைத்து ஆவின் நட்டத்தில் இயங்குவதாக கூறி தனியாரிடம் ஒப்படைத்து விடுவார்கள்.

ஆவின் நிறுவனத்தை தனியார் நிறுவனத்துடன் ஒப்பீடுவது, அருகில் உள்ள மாநிலத்துடன் ஒப்பீடு செய்து பால் விலையை உயர்த்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.   

தனியார் பள்ளியில் கொள்ளை கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதற்காக அரசு பள்ளியில் கட்டணம் வசூலிக்க முடியுமா? அரசு நிறுவனத்திற்கு மக்கள் நலனே முதன்மையானது என்ற கொள்கை இருப்பதை ஆவின் நிர்வாகத்திற்கு தெரியுமா? தெரியாதா?

எனவே மக்கள் அதிகமாக பயன்படுத்த கூடிய ஆவின் பால் விலையை எந்த நிறுவனத்தோடும் ஒப்பீடு செய்யாமல் மக்களின் நலனை மட்டும் முதன்மையாக கொண்டு பால் விலையை குறைக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

MUST READ