இந்தியாவில் உள்ள குஜராத் மாடலை விட, மகாராஷ்டிராவை விட, ராஜஸ்தானை விட, இன்னும் மற்ற மாநிலங்களை விட தொழில்துறையில் தமிழ்நாடு புதிய பாதையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. டாப் கியரில் செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் வேகத்தை மற்ற மாநில முதல்வர்களை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
ஏற்கனவே பொறியியல் துறை, மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் துறை, ஜவுளி உற்பத்தி துறை,தோல் மற்றும் சர்க்கரை உற்பத்தித் துறைகளில் தொடர்ந்து முன்னணியில் தமிழ்நாடு இருந்து வருகிறது.
இந்த நிலையில் 2024 ஜனவரி 7 -8 ஆகிய தேதிகளில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சென்னையில் ”உலக முதலீட்டாளர் மாநாடு” நடைபெற்றது. அதில் பல்வேறு தொழில் முனைவோர்கள் கலந்துக் கொண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் தொழில் முதலீடுகளை ஈர்க்க தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்.
ஐ-போன் உற்பத்தியில் நீண்ட ஆண்டுகளாக மிகப்பெரிய பங்காற்றி வரும் தைவான் நாட்டைச் சேர்ந்த Foxconn நிறுவனம், தனது உற்பத்தி வணிகத்தை 99 சதவீதம் சீனாவில் தயாரித்து வந்தது. தற்போது அந்த நிறுவனம் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது Foxconn உற்பத்தி தொழிற்சாலையை மேலும் விரிவுபடுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
சீனா நாட்டு “செங்சாவு” நகரில் இயங்கும் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தங்குமிட வளாகங்களை பிரமாண்டமாக கட்டி வருகிறது. அதேபோன்று ஸ்ரீபெரும்புதூரிலும் விரிவாக்கம் செய்ய Foxconn நிறுவனம் தொடங்கியுள்ளது.
சீனாவில் உள்நாட்டு பிரச்சனையினாலும், பாதுகாப்பற்ற சூழ்நிலையினாலும் அந்த நட்டைவிட்டு பல நிறுவனங்கள் வெளியேறி வருகிறது.அவ்வாறு வெளியேறும் நிறுவனங்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
கடந்த ஆண்டு உலகளவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐ-போன்களில் 13 சதவீதம் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டுள்ளது. அதில் 9 சதவீதம் அதாவது நான்கில் மூன்று பங்கு தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று அடுத்த ஆண்டு ஐ-போன்கள் உற்பத்தி செய்யப்படும் அளவு இரண்டு மடங்கு கூடுதலாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரேயொரு நாள் பிரதமர் நரேந்திர மோடியும் நூறு கேமராவும் என்ற திட்டத்தில் மிக பிரமாண்டமான முறையில் அறிவிக்கப்பட்ட “மேக் இன் இந்தியா” திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் முடியபோகிறது. ஆனாலும் அந்த திட்டம் என்ன ஆனது என்று தற்போது வரை யாருக்கும் தெரியவில்லை.
2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற போது உற்பத்தி அளவு இருந்ததை விட தற்போது 16% குறைந்து போய் விட்டதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவை விட உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவின் இளைஞர்களின் எண்ணிக்கை, உழைக்கும் வயதுடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த மக்கள்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ற அளவிற்கு, இளைஞர்களை பயனுள்ள வகையில் மாற்றுவதற்கு மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. நாட்டில் 72 சதவீதம் இளைஞர்கள் வேலையில்லாத துயரத்தில் இருப்பதாக கருத்து கணிப்பு கூறுகிறது.
ஆனால் தமிழ்நாடு இளைஞர்களுக்கு தேவையான கல்வி வழங்குவதற்கும், படித்த இளைஞர்களுக்கு வேண்டிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு மட்டுமே முன்னோக்கி செல்கிறது.
ஏழு கோடி பேர் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு தற்போது தொழில் துறையில் வெற்றிபெற்று இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.
சென்னையில் கார் உற்பத்தி தொழிற்சாலைகள், கோயம்புத்தூரில் இரும்பு வார்ப்பு நிறுவனம் (die-casting) மற்றும் மோட்டார் பம்ப் உற்பத்தி தொழிற்சாலைகள், திருப்பூரில் பின்னலாடை தொழிற்சாலைகள், சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலைகள், வேலூரில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள், ஸ்ரீபெரும்புதூரில் ஐ-போன்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் என்று நிபுணத்துவம் பெற்று இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருந்து வருகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் இருப்பதால் முதலீட்டாளர்கள் இங்கே தொழில் தொடங்க போட்டி போட்டு கொண்டு முன் வருகின்றனர்.
மேலும் அமெரிக்காவை சேர்ந்த CORNING நிறுவனம் ஐ-போன்களுக்கு தேவைப்படும் கொரில்லா கிளாஸ் பாகத்தை உற்பத்தி செய்ய தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோன்று வியட்நாமைச் சேர்ந்த Vinfast நிறுவனம் மின்சார வாகனங்களை தயாரிக்க $2 பில்லியன்(200 கோடி ரூபாய்) தொகையை தமிழ்நாட்டில் முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேகமான செயல்பாடுகளுக்கு ஏற்ப தொழில்துறை அமைச்சர் டி. ஆர்.பி.ராஜா, துறை அதிகாரிகளுடன் இணைந்து சிறிய உதிரி பாகங்கள் முதல் அனைத்து விதமான உற்பத்தி நிறுவனங்களையும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வர கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.
தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருப்பதாலும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு இருப்பதாலும் பெண்கள் சுதந்திரமாக கல்வி பயின்று வருகின்றனர். பெண்களுக்கான வேலை வாய்ப்புகளும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 43% பேர் தமிழ்நாட்டில் வேலை செய்கிறார்கள்.
இப்படி தொழிற்துறையில் இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய அளவிற்கும், உலகில் வளர்ந்த நாடுகளுடன் போட்டிப் போடும் அளவிற்கும் தமிழ்நாடு அரசு புதிய பாதையில் தடம் பதித்து வருவது பாராட்டுக்குரியது.