ஆளுநரின் பொய்மூட்டைகள் – முதலமைச்சருக்கு கவனம் வேண்டும்
ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கு எதிராக திட்டமிட்டு பொய்யான செய்தியை பரப்பி வருகின்றார். இதற்கு திமுகவினர் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காமல் கடந்து சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 4ம் தேதி தி டைம்ஸ் ஆப் இந்தியா என்ற ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தமிழக அரசுக்கு எதிராக உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை அதிகம் சொல்லியிருக்கிறார்.
முதலாவதாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் மாயிலாடுதுறை, தருமபுரம் ஆதினத்திற்கு சென்றபோது ஆளுநரின் பாதுகாப்பு வாகனத்தை கம்பு மற்றும் கற்கலால் தாக்கினர். தாக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஆளுநரின் குற்றச்சாட்டு.
அந்த சம்பவத்தில் ஆளுநரின் பாதுகாப்பு வாகனத்தை தாக்கியவர்கள் 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டு நீதிமன்றம் விசாரணை வரை வந்துவிட்டது என்பதுதான் உண்மை. ஆனால், வழக்கே பதிவு செய்யவில்லை என்று பொய்யான தகவலை ஆளுநர் கொடுத்துள்ளார்.
இரண்டாவது, கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த கலவரத்தின் போது பசுவின் பால்மடியை அறுத்ததாக ஒரு மிக மோசமான குற்றச்சாட்டை ஆளுநர் வைத்துள்ளார். அன்பும், அறவணைப்பும் உள்ள தமிழ்நாட்டில் பசுவின் பால் மடியை அறுக்கும் அளவிற்கு கொடூரமானவர்கள் ஒருவரும் இதுவரை பிறக்கவில்லை. இனிமேலும் பிறக்கமாட்டார்கள். ஆளுநர் சிறிதும் மனச்சாட்சி இல்லாமல் பேசுகிறார் என்பது சிறுபிள்ளைகளுக்குக் கூட தெரிகிறது. ஆனால், இதற்கு திமுகவினர் உடனடியாக பதிலடி கொடுக்காமல் காலம் தாழ்த்தியது ஏனென்று தெரியவில்லை.
மூன்றாவது, சிதம்பரத்தில் பெண்பிள்ளைகளுக்கு இரு விரல் பரிசோதனை செய்ததாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். பால்ய திருமணமும், திருமணவயதிற்கு முன் திருமணம் செய்வது என்பது 1929ம் ஆண்டு சட்டப்படி குற்றம் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் 8, 10, 11 வயது பெண் பிள்ளைகளுக்கு பால்ய வயது திருமணமும், 15, 16 வயது பெண் பிள்ளைகளுக்கு சிறிய வயது என 30 திருமணங்கள் சட்டத்திற்கு புறம்பாக நடந்துள்ளது. அதில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்கள் குடும்பங்களில் 8 திருமணங்கள் நடந்துள்ளது.
சிதம்பரம் கோயில் தீட்சதற்களின் குடும்பத்திற்கு சுமார் 4000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்கள் உள்ளது. அந்த சொத்துக்கள் அவர்களைத் தவிற வேறு யாருக்கும் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகிறார்கள். அதனால் பெண் எடுத்தல், கொடுத்தல் அவர்களுக்குள்ளே செய்துக் கொள்வார்கள்.
மேலும் சிதம்பரம் கோயிலில் திருமணம் ஆகாதவர்கள் தீட்சதர்கள் பணியை செய்யமுடியாது என்கிற விதி உள்ளது. ஒருவர் தீட்சதர் ஆகவேண்டும் என்றால் அவருக்கு திருமணம் ஆகியிருக்க வேண்டும். தீட்சதர் குடும்பத்திற்கு மட்டுமே கோயில் சொத்துக்களை அனுபவிக்ககும் உரிமை உண்டு. அவர்களுக்கு தீட்சதர் தொழிலைத் தவிர வேறு எந்த வேலையும் தெரியாதவர்களாகவும், பெரிய அளவில் படிப்பு அறிவு இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள்.
சிதம்பரம் கோயில் தீட்சதர்கள் அய்யர் வகையை சேர்ந்தவர்கள். அவர்கள் அய்யங்கார் குடும்பத்தில் கூட பெண் கொடுக்கவோ, எடுக்கவோ மாட்டார்கள். இந்த நிலையில் அவர்களுக்குள்ளேயே பெண் கொடுக்கல், எடுத்தல் நடப்பது வழக்கம். அதனால் ஆண்டாண்டு காலமாக பால்ய வயது திருமணங்களை செய்துக் கொள்கிறார்கள். அதுபோல் கொரோனா காலத்தில் ஒரு 10 வயது பெண் குழந்தையை 27 வயது இளைஞருக்கு திருமணம் செய்துள்ளனர். அதனை அவர்களில் ஒருவர் ரகசியமாக புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவைகள்தான் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தமிழக அரசின் மீது ஆளுநர் வைக்கும் குற்றச்சாட்டுகள்.
படித்தவர், காவல்துறை உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவியில் இருப்பவர் இப்படி பொய்யும், புரட்டுமாக பேசுவதை ஒரு பாமரன் கூட ஏற்றுக் கொள்ளமாட்டான்.
ஆளுநரின் பொய் குற்றச்சாட்டுகள் தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் மெயின் எடிசனில் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. ஆளுநரின் பொய் மூட்டைகள் இறக்கைக் கட்டி பறக்கிறது. ஆனால் அதனை எதிர்கொள்வதில் திமுகவினர் கோட்டை விட்டுவிட்டார்கள்.
ஆளுநர் மாளிகையில் என்ன நடக்கிறது என்பதை முதல்வர் அறிந்திருக்கிறார? அல்லது முதல்வருக்கு தகவல் கொடுக்கின்ற உளவுத்துறை மறந்துவிட்டதா என்பது தெரியவில்லை.
அப்படி முதல்வருக்கு தெரிந்திருந்தால் தி டைம்ஸ் ஆப் இந்தியாவில் 4ந் தேதி காலையில் வந்த குற்றச்சாட்டுக்கு உடனடியாக எதிர்வினை ஆற்றாதது ஏன்? நான்கு மணி நேரம் கழித்து தங்கம் தென்னரசு பதில் கொடுப்பது ஏன்? இரண்டு நாள் கழித்து முதலமைச்சர் பேசுவது ஏன்?
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறங்கியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக ஜூன்-3ம் தேதி கலைஞரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ராகுல்காந்தி, மல்லிகா அர்ஜூன் கார்க்கே, பீகார் முதல்வர் நிதஷ்குமார், துணை முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தாபேனர்ஜி என்று ஏராளமான தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
அகில இந்திய அரசியலுக்குள் ஸ்டாலின் நுழைவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு முதலமைச்சரின் நற்பெயருக்கும், தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கும் கலங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக தலைவர்கள் விரும்புகிறார்கள். அதுவே அவர்களின் திட்டம். அதை ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பாக செய்கிறார். இதற்கு மேலும் செய்வார். முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் கவனமாக இருக்க வேண்டும்.