Homeசெய்திகள்தலையங்கம்கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி டெல்லி வரை தொடருமா?

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி டெல்லி வரை தொடருமா?

-

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி டெல்லிவரை தொடருமா?

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றிப் பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக தற்போது எதிர்கட்சி வரிசையில் அமரவுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடருமா? அல்லது சட்டமன்றத் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் மக்கள் வேறு மாதிரியாக பிரித்து பார்த்துதான் வாக்களிக்கிறார்களா என்று ஒரு சாரர் விவாதம் செய்து வருகின்றனர்.

கர்நாடகா தேர்தல்

இந்தியா போன்ற மக்கள் தொகையும், மாநிலங்களும் அதிகம் உள்ள நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதில் வெற்றிவாகை சூடிய கட்சிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி, அடுத்தது நாடாளுமன்றத்திலும் நாம் தான் என்று மார்தட்டிக் கொள்வது வழக்கம். அதுபோன்றுதான் தற்போதும் பேசப்படுகிறதா?

கடந்த 2018ல் கர்நாடகா, மத்தியப் பிரதேசம்,சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது. அந்த மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கின்ற அளவிற்கு வெற்றியைப் பெற்றது. அதில் சில மாநிலங்களில் “புறவாசல்” வழியாக பாஜக ஆட்சியை பறித்துக் கொண்டது.

2018 ம் ஆண்டிற்கு பின்னர் 2019 மே மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேற்குறிப்பிட்ட அனைத்து மாநிலங்களிலும் பாஜக எம்.பிக்கள் அதிகம் வெற்றிபெற்றனர்.  அதேபோன்று டெல்லியிலும் பாஜக 7 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றியது. ஒன்பது மாதம் கழித்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 உறுப்பினர்களில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. வெறும் 8 தொகுதிகளில் மட்டும் பாஜக வெற்றி பெற்றது.

இதுவரை நடந்த தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் ஒரு கட்சிக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வேறு கட்சிக்கும் மக்கள் வாக்கு செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.

நாடாளுமன்றம்

ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளே வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கருதுகிறேன்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கை இழந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் கணவர் பரகலா பிரபாகர், மத்திய அரசு பொறுப்பற்ற முறையில் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். அவரைப் போன்று பல பொருளாதார ஆலோசகர்கள் நாடு மிகவும் ஆபத்தான பாதையில் பயணம் செய்வதாக கண்டித்துள்ளனர்.

பிரதமர் மோடி அரசு வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் பற்றியெல்லாம் பேசுவதில்லை. அதுகுறித்து விவாதம் செய்வதற்கு தயாராகவும் இல்லை. எப்பொழுதும் இஸ்லாமியர்களை பற்றியும், அந்த மக்களை மன ரீதியாக துன்புறுத்தியும் அரசியல் செய்கின்றார். இதை ஒரு பிரதமரே பேசுவதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன் பர்க் நிறுவனம் அதானி குழுமம் பங்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைக்கேடுகளில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டியது. இந்த அறிக்கை நாடு முழுவதும் பெரும் விவாதத்தை எழுப்பியது.

ஹிண்டன்பர்க் அறிக்கை நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தது. பிரதமர் மோடி இதற்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தார்.. தவிர்த்தார் என்றும் சொல்லலாம். இந்த விஷயம் மோடி அரசுக்கு நெருக்கடியை கொடுத்தது. மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்பட்டது.

Rahul Gandhi

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் அமைதியை விரும்பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது பிரபளமானவர்கள், சாதாரணமானவர்கள், இளைஞர்கள் என்று அனைவரும் ராகுல்காந்தியை அரவணைத்தார்கள். ஆதரவுகரம் நீட்டினார்கள். அந்தப்பயணம் காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்திக்கும் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. அதனால் ராகுல் காந்தி மீது பாஜக அரசுக்கு கோபம் ஏற்பட்டது. அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் பறித்தது. அரசு பங்ளாவை காலி செய்ய வைத்தது. இது அனைத்தும் ராகுல்காந்தி மீது மேலும் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கர்நாடகா வெற்றியை தொடர்ந்து தெலுங்கானாவில் தேர்தல் வரவுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் கோஷ்டி சண்டையை தூக்கி ஓரம் வைத்துவிட்டு களத்தில் இறங்கி வேலை செய்ய தொடங்கியுள்ளனர்.

கர்நாடகா வெற்றி காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. கூட்டணியில் இருக்கும் மாநில கட்சியினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மொத்தத்தில் நாடு முழுவதும் மோடியா, ராகுலா என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் ராகுல் காந்தி வெற்றிப் பெறுவார் என்கிற நம்பிக்கை எழுந்துள்ளது.

MUST READ