Homeசெய்திகள்தலையங்கம்தொழிலாளர்களின் தோழர் காரல் மார்கஸ்

தொழிலாளர்களின் தோழர் காரல் மார்கஸ்

-

காரல் மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி பிறந்தார். அவருடைய 205வது பிறந்த நாளில் APC NEWS TAMIL வெளியிடும் சிறப்பு கட்டுரை

காரல் மார்க்ஸ் என்னும் மாமேதை

தொழிலாளர்களின் தோழர் காரல் மார்கஸ்

மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரிதான் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள். ஒரு சிலர் மட்டும் இந்த சமுதாயத்தை முரண்பட்ட கோணத்தில் பார்க்கின்றனர், சிந்திக்கின்றனர்.

இன்று இந்த சமுதாயம் கொஞ்சமாவது வளர்ந்திருக்கிறது என்றால் அந்த முரண்பட்ட மனிதர்களின் பார்வையும், சிந்தனையும் மட்டுமே காரணம்.

அந்த முரண்பட்ட மனிதர்களில் ஒருவர் தான் காரல் மார்க்ஸ் என்னும் மாமேதை.

தத்துவ அறிவு, அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானப் பூர்வமான சமத்துவம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகவும் இணக்கமானதாகவும் இருப்பதை அறிவியல் பூர்வமாக விளக்குவதே மார்க்சியம்.

சமுதாய மாற்றத்தை விரும்பக்கூடிய ஒருவர், அதற்காக போராடுவதற்கு முன்வரக்கூடிய ஒருவர், இந்த சமுதாயம் எந்த விதிகளின் அடிப்படையில் இயங்குகிறது? இந்த சமுதாயத்தின் அமைப்பு என்ன? நாமும் நம்மை சூழ்ந்து இருக்கின்ற உறவுகளும் எப்படி ஒன்றின் மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த விஞ்ஞானப் பார்வையை முதன்முதலாக மனித இனத்திற்கு வழங்கியவர் தான் காரல் மார்க்ஸ்.

உலகம், பொருளாதார வளர்ச்சியில் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு வளர்ந்து வருகிறது. இது எதனால் ஏற்படுகிறது?

மனிதன் விலங்குகளிடம் இருந்து மாறுப்பட்டு தொழில் நுட்பம், விஞ்ஞானம் மற்றும் கலை அதிசயங்களை படைக்கின்ற ஆற்றல் பெற்றவனாக உருவெடுத்ததின் காரணத்தை மார்க்சிய தத்துவம் மட்டுமே விளக்குகிறது.

ஆன்மா, பருபொருள்

ஆதிகாலத்தில் மனிதன், மனிதனை சுற்றியுள்ள உலகம் எப்படி தோன்றியது ? அது எப்படிப்பட்ட உலகமாக இருந்தது ? அந்த உலகத்தில் மனிதனின் இடம் என்னவாக இருந்தது ? இதை எல்லாம் சிந்திக்கும் போதுதான் தத்துவ அறிவு பிறந்தது.

மனிதனின் சிந்தனைக்கும் அவனுடைய வாழ்நிலைக்கும் இடையில் உள்ள தொடர்பைப் பற்றிய கேள்விதான் வாழ்க்கை.

வாழ்க்கை என்பது உறவு முறைகளை அடிப்படையாக கொண்டது. உறவு என்பது அவனும் அவனை சுற்றியுள்ள மனிதர்கள், கருத்துகள் மற்றும் பொருட்களுடன் வைத்திருக்கும் விருப்பத்தின் அடிப்படையில் தான் வாழ்க்கை அமைகிறது.

மனிதனிடம் தோன்றிய ஆன்மா, பருபொருள் இந்த இரண்டில் எது முதன்மையானது என்ற கேள்விதான் தத்துவ அறிவின் அடிப்படை கேள்வியாக எழுந்தது.

(ஆன்மா : ஆவி மற்றும் உலகத்தை கடவுள் படைத்தார் என்ற கருத்து.
பருப்பொருள் : கடவுள் உலகத்தை படைக்க வில்லை, பருப்பொருளின் பரிணாம வளர்ச்சிதான் உலகம் தோன்ற காரணம்)

இந்த அடிப்படையில் தான் உலகம் முழுவதிலும் உள்ள மனிதன் இரண்டாக பிரிந்து போரிட்டுக் கொண்டு இருக்கிறான்.

இந்த தத்துவத்தின் ஆழத்தையும், அதன் ஆணி வேரையும் அழகாக எடுத்து விளக்கியவர்தான் காரல் மார்க்ஸ்.

மனிதனின் உழைப்பு, அவனுடைய பொருளாதார உற்பத்தி தான் சமுதாய வளர்ச்சியின் அடிப்படை சக்தியாக இருக்கிறது. இந்த நடவடிக்கையின் போக்கில் மனிதன் இயற்கையை மாற்றுகிறான். கூடவே தன்னையும் தன் வாழ்க்கை சூழ் நிலைகளையும் மாற்றிக் கொள்கிறானே தவிர வெறும் ஆன்மீகச் சிந்தனைக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

உழைக்கும் தொழிலாளர்கள், பொருளாதாரத்தை உற்பத்தி செய்யும் சாதாரண மக்கள் தான் வரலாற்றை படைக்கிறார்கள் என்று மார்க்ஸ் விளக்கினார்.

அதுவரை தனிப்பட்ட நபர்களும், வீரர்களும், ஆட்சியாளர்களும் வரலாற்றை படைத்ததாக சமூகம் மேம்போக்காக நம்பிக்கொண்டிருந்தது.

Child Labour

அந்த தவறான நம்பிக்கையாளர்களும், ஆட்சியாளர்களும் தான் குழந்தை தொழிலாளர்களை உருவாக்கி வைத்திருந்தனர்.

18-ம், 19-ம் நூற்றாண்டில் குழந்தை தொழிலாளர்களை வைத்தே உலகம் இயங்கி வந்தது.

சிறிய தொழிற்கூடம் முதல் பெரிய ஆலை வரை திரும்பும் திசை எல்லாம் குழந்தை தொழிலிளர்களை வேலை செய்ய நிர்பந்தம் செய்து வந்தனர்.

காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸின்

குழந்தைகளின் உரிமைக்காக முதன் முதலில் குரல் கொடுத்தது காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸின் அறிக்கைதான். அதன் அடிப்படையில் 19-ம் நூற்றாண்டில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு போராட்டம் தீவிரம் அடைந்தது. அதில் சிறிது வெற்றியும் கிடைத்தது.

1848- ல் வெளிவந்த கம்யூனிஸ்ட் அறிக்கையில் அனைத்து குழந்தைகளும் அரசு பள்ளியில் இலவசக் கல்வி பயில வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Government school

பணியில் இருந்த குழந்தைகள் படிப்படியாக பள்ளிக்கு சென்றார்கள் என்றால் அதற்கு காரல் மார்க்ஸே மூலக் காரணமாக இருக்கிறார்.

தற்போது நாள் தோறும் 8 மணி நேரம் வேலை, மதிய உணவிற்கு இடைவேளை, வாரத்திற்கு ஆறு நாள் வேலை, ஒரு நாள் விடுமுறை என்ற சலுகையை அனுபவித்துக் கோண்டிருக்கிறோம். 58, 60 வயதில் ஓய்வு பெற்றப் பின்னர் (பென்ஷன்) ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறோம். இவ்வளவு சலுகைகளை தொழிலாளர்களுக்கு போராடி பெற்று தந்த அந்த மாமேதை காரல் மார்க்ஸ்க்கு நன்றி சொல்ல வேண்டும். 

PENSION

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக காரல் மார்க்ஸ் பாடுப்பட்டார். தொழிலாளர்கள் தன் வேலையில் படைப்பாற்றலுடன் இருக்க வேண்டும், செய்யும் வேலையில் திருப்தி அடைய வேண்டும் என்று விரும்பினார். “அடிப்படையில் நாம் வாழும் வாழ்வில் நாம் செய்யும் வேலையில் நியாயம் உள்ளதாக, திருப்தியானதாக இருக்க வேண்டும்” என்று விரும்பினார்.

மேலும், தங்களுடைய வேலையில் எப்பொழுது ஆனந்தம் கிடைக்கும் என்றால் “தாங்கள் செய்த பணியில் தங்களை காணும் போது ஆனந்தம் கிடைக்கும்” என்றார்.

அவர் எப்பொழுதும் மாற்றத்தை விரும்பக் கூடியவராக இருந்தார். மாற்றம் என்ற சொல்லைத் தவிர மற்றவை அனைத்தும் மாறக்கூடியவை என்ற தத்துவத்தை தந்தவர் காரல் மார்க்ஸ்.

– என்.கே.மூர்த்தி

MUST READ