கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூரில் வட இந்திய தொழிலாளர்கள் கையில் கிடைத்த கல், கம்பி, கொம்பு போன்ற ஆயுதங்களை கொண்டு தமிழக தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த காட்சியை பார்த்த தமிழ் உணர்வாளர்கள் சிலர் பதறிப்போனார்கள், பலர் கடந்து போய்கொண்டு இருக்கிறார்கள்.
கும்மிடிப் பூண்டியிலிருந்து குமரிமுனை வரை, குமுளியிலிருந்து நாகை வரை, சென்னைப் பட்டணத்திலிருந்து சிற்றூர் வரை அன்றாடம் ஆயிரம், பல்லாயிரமாய் வட மாநிலத்தவர் குடியேறி வருகிறார்கள்.
தமிழ்நாட்டிற்குள் வெள்ளம் போல் வரும் இந்த வெளி மாநிலத்தவர்கள் ஏன் தமிழகத்தை நோக்கி மட்டும் படையெடுக்கிறார்கள்? இதில் புதைந்திருக்கும் உள்நோக்கம் என்ன? இதை இப்படியே அனுமதித்தால் எதிர்கால தமிழ்நாடு எப்படி இருக்கும்? என்ற அச்சமும், கவலையும் தமிழ் உணர்வாளர்களை வாட்டி வதைக்கிறது.
தமிழர்களின் மக்கள் தொகைக்குச் சமமாய் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தால் முதலில் தமிழ்நாடு தமிழர்களிடம் இருந்து வட மாநிலத்தவரிடம் பறிப்போகின்ற அபாயம் இருக்கிறது. அதனை தொடர்ந்து தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படும்.
வெளிமாநிலத்தவர் வேலை தேடி வெறுங்கையோடு வருகிறார்கள். ஆனால் அவர்கள் வெறும் தலையோடு வருவதில்லை. இந்தி ஆதிக்கம், இந்தியா ஆளும் தலைமைக் குடிகள் தாங்கள் தான் என்ற தலைக்கனத்துடன் வருகிறார்கள். இந்திக்காரர்களும், வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களும் அவரவர் மொழியை, பண்பாட்டைத் தமிழ்நாட்டில் பரப்புகிறார்கள்.
இந்நிலை அன்றாடம் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் தமிழ் மொழி – தமிழர்களின் பண்பாடு என்னவாகும்? தமிழகம் கலப்பினத் தாயகமாக மாறும். சொந்த மண்ணிலேயே தமிழர்கள் அயலார்க்குக் கீழ்ப்பட்டு, அவர்களை அண்டிப் பிழைக்க வேண்டிய ஆபத்தான நிலை ஏற்படும்.
ஏற்கெனவே தமிழ் நாட்டின் பொருளாதார ஆதிக்கம் மார்வாடி, குஜராத்தி, பார்சிப் பெரு முதலாளிகள், பெரு வணிகர்கள் கையில் தான் இருக்கிறது. அவர்களைச் சார்ந்து அவர்களின் தயவில் தொழிலும் வணிகமும் நடத்தும் நிலையில்தான் தமிழர்கள் இருக்கிறார்கள்.
தமிழர்களிடமிருந்த துணி ஆலைகள், நூற்பாலைகள், சிமெண்ட்டு ஆலைகள், மோட்டார் தொழிற்சாலைகள், உதிரிபாகங்கள், நிதி நிறுவனங்கள், தங்க வணிகம், முதலியவை மார்வாடி, குஜராத்தி, மலையாளிகளின் ஏகபோகங்களாக மாறிவிட்டன. மேலும் கணிப்பொறித் துறை, பெயிண்ட்டு, எழுதுபொருள்கள், அச்சுத் தொழில்கள் அனைத்தும் மார்வாடி, குஜராத்திகளின் வசம் தான் உள்ளன.
ரியல் எஸ்டேட்டிலும் மார்வாடி – குஜராத்திகளே ஆதிக்கம் செலுத்துகின்றனர். திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி என்று பல மாவட்டங்களில் ஒவ்வோர் இடத்திலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மார்வாடிகள் வாங்கி வேலி போட்டு வியபாரம் செய்து வருகின்றனர்.
இங்கு சொல்லப்படும் தொழில் வளர்ச்சி, தமிழ் நாட்டை அயல் இனத்தாரின் வேட்டைக் காடாக மாற்றியுள்ளது. தமிழர்களாய் உள்ள தொழில் முனைவோரைப் பின்னுக்குத் தள்ளுகின்றது. அயலாரை அண்டிப் பிழைப்போராகத் தமிழர்களை மாற்றியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களான திருச்சி அனல் மின் நிலையம், நெய்வேலி அனல் மின் நிலையம், ஆவடி பாதுகாப்பு துறை தொழிற்சாலைகள், திருச்சி போன்ற இடங்களில் உள்ள படைத்துறைத் தொழிற்சாலைகள், இரயில்வேத்துறை, வருமானவரி, உற்பத்தி வரி, சுங்க வரி அலுவலகங்கள் எனப் பலவற்றிலும் வெளி மாநிலத்தவர்களையே மிக அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் சேர்க்கின்றனர்.
இந்திய அரசுத் தொழிற்சாலைகள் 1950களில் தொடங்கப்பட்டபோது அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாக வேலைக்கு ஆள் எடுக்க வேண்டும் என்று அரசாணை போடப்பட்டது. ஆனால் காலப் போக்கில் அந்தந்த நிறுவனங்களும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தேர்வு நடத்தி வடமாநிலங்கள் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்களை அதிகமாகச் சேர்த்துத் தமிழர்களின் பிள்ளைகளை வேலைக்கு எடுக்காமல் “தமிழ் இன ஒதுக்கல்” கொள்கையைக் கடைபிடிக்கின்றன.
இப்படி வெளியார் ஆதிக்கம் அனைத்துப் பிரிவுத் தமிழர்களின் வாழ்வுரிமைகளைத் தமிழ்நாட்டிலேயே பறிக்கப்படுகிறது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதியையும் பறிக்கிறது.
தொழில், வணிகம், வேலை, கல்வி, திரைப்படத்துறை, செய்தி ஊடகத்துறை முதலியவற்றில் வெளியாரின் ஆதிக்கம் நிலவும் போது தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக நீடிக்குமா?
இன்றை ஆபத்தை 1950லேயே தந்தை பெரியார் உணர்ந்து, ‘வடவர் எதிர்ப்பு மாநாடு’ நடத்தி எச்சரித்திருக்கிறார்.
வடமாநிலத்தவர்கள் அதிகமாக இருக்கும் திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை சௌக்கார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பாஜகவின் செல்வாக்கு கூடியிருக்கிறது. அந்த இடங்களில் திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள் உள்ளிட்ட முற்போக்கு சிந்தனை உள்ள இயக்கங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. முழுவதுமாக வட மாநிலத்தவர்களை களமிறக்கி, தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற நினைக்கிறது.
அரசு வேலைகளில் தமிழ்நாடு பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டினை, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவர்கள் அபகரித்துக்கொள்கிறார்கள். தொடர்ந்து அரசு வேலைகளிளோ, தனியார் வேலைகளிளோ தமிழகர்களுக்கான வாய்ப்புகளை வடமாநிலத்தவர்களே ஆக்கிரமித்துக்கொள்கின்றனர்.
இனியும் காலம் தாழ்த்தாமல், தமிழ், தமிழ்நாடு, தமிழர்களின் வாழ்வாதாரம் , உரிமை பறிபோகும் முன்னர் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நமது இளைஞர்கள் நடிகர்களின் படங்களை ரசிப்பது, அவர்களின் கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வது மட்டுமே இந்த பிறவியின் நோக்கம் என்று கருதாமல் தமிழ் மண், தமிழ்நாடு என்ற சிந்திக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்.
-என்.கே. மூர்த்தி