Homeசெய்திகள்தலையங்கம்விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேதனை தருகிறது

விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேதனை தருகிறது

-

கடந்த 2021 ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர்.

3 லட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த கணக்குப்படி நாள் ஒன்றுக்கு, 421 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

2021 ல் கொரோனா ஊரடங்கு காலத்திலும் சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடந்துள்ளன என்பது தான் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 100 சாலை விபத்துகளில், 44 விபத்துக்கள், இருசக்கர வாகனங்கள் தொடர்பானவை. அந்த விபத்துகளில் இறப்பவர்களில், 18 ஆயிரத்து 800 பேர் பாதசாரிகள். இவர்கள் அனைவரும் சாலைகளை கடக்கும் போது, வாகனங்கள் மோதி இறந்தவர்கள்.

சாலைகளை கடப்பதற்கு காத்திருக்காத கால்கள், பொறுமை இல்லாத ஓட்டுநர்களிடம் சிக்கி உயிரை கொடுத்திருக்கிறார்கள்.

அதேபோல, தலை கவசம் அது உயிர் கவசம் என்ற விளம்பரத்தையும் மதிக்காமல் பயணம் செய்த 46 ஆயிரத்து 593 பேர் இறந்துள்ளனர்.

இருசக்கர வாகன விபத்துகளில் இறந்தவர்களில், மூன்றில் இரண்டு பேர் “தலைக்கவசம்” அணியாததால், பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளனர்.

மேலும், சாலை விபத்துக்களால் நிகழ்ந்த இறப்புக்களில், கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தையும் தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்து உள்ளன.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் முகத்தை முழுமையாக மூடக்கூடிய ஹெல்மெட் அணிந்து சென்றால் விபத்தில் சிக்கும் போது மோசமான அளவில் காயம் அடைவது 64 சதவீதம் குறைவாகவும் மூளையை பாதிக்கும் அளவுக்கு காயம் அடைவது 24 சதவீதம் குறைவாகவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதே 2021ல்  16 ஆயிரத்து 397 பேர் காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்து மாண்டு போனார்கள். “டாடா“ நிறுவனத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி சில மாதங்களுக்கு முன் கார் விபத்தில் உயிரிழந்தார். அதற்கு அவர் சீட் பெல்ட் அணியாததே காரணம் என்று கூறப்பட்டது. அதனால் பல மாநிலங்களில் காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்போருக்கு அதிக அபராதம் விதிப்பது உட்பட பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இருப்பினும், சீட் பெல்ட் அணியாமல், ஹெல்மெட் அணியாமல் பயணிப்போரின் எண்ணிக்கை குறைந்த மாதிரி தெரியவில்லை. இந்த விஷயத்தில் இன்னும் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வதுடன் அபராதத்தையும் அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து தவறு செய்பவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

இது தவிர, நம் நாட்டில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் தான் விபத்து நிகழ முக்கிய காரணம். நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு இடத்தில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் சாலைகள் பராமரிப்பு என்பது படுமோசமாக உள்ளது.

மேலும் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்லும் பழக்கம் நம்மிடையே அதிகரித்துள்ளது. போக்குவரத்து விதி முறைகளை பள்ளிகளிலேயே மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பாடத்திட்டத்தில்  இடம்பெறச் செய்ய வேண்டும்.

ஆண்டுதோறும் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தரமான சாலைகள் அமைப்பது உட்பட பல உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே சாலை விபத்துக்களை குறைக்க முடியும்.

தாய் ஊட்டி வளர்த்த ரத்தத்தை, தார்சாலையில் சிந்தலாமா?

விலைமதிப்பற்ற உயிரை வீணாக விடலாமா?

சிந்தியுங்கள்…..

MUST READ