தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணையிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விலகியுள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு வந்த நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முன்பு வழக்கு தொடரப்பட்டது. “அரசின் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கும் நடைமுறை சட்டத்திற்கு புறம்பானது. எனவே தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கென தனிப்பட்ட சுயாதீன நியமன குழு அமைக்கப்பட வேண்டும்” என அந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் “பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் ஆலோசனையின் பேரில் இந்தியக் குடியரசுத் தலைவரால் தேர்தல் ஆணையர்கள் இனி நியமிக்கப்பட வேண்டும் “என அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் பிரதமர், மத்திய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் அல்லது மக்களவையில் மிகப்பெரிய எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார் என மத்திய் அரசு சட்டம் கொண்டு வந்தது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபடி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை இந்த தேர்வு குழுவில் சேர்க்காமல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதனையடுத்து மத்திய அரசின் இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்), சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (பியுசிஎல்), லோக் பிரஹாரி ,காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை இன்று (03/12/2024) விசாரித்தது. அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா வழக்கு விசாரணையிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து இந்த மனுக்கள் ஜனவரி /2025 ல் மற்றொரு அமர்வில் பட்டியலிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தங்கள் பதில்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.