உளுந்தூர்பேட்டையில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருடிய ஐந்து பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி தனியார் மண்டபம் பின்பகுதியில் வசித்து வருபவர் தனியார் வங்கி ஊழிய ஸ்டீபன்ராஜ். இன்று இவர் வங்கிக்கு சென்ற போது அவருடைய மனைவி ஜெனிபர் (27) என்பவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த ஐந்து பெண்கள் தண்ணீர் கொடுக்குமாறு கேட்டு பேச்சு கொடுத்துள்ளனர், தொடர்ந்து விடாமல் பேசிக்கொண்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த ஜெனிபர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது.
சிறிது நேரத்தில் வெளியே வந்து பார்த்தபோது ஐந்து பெண்களையும் காணவில்லை அக்கம் பக்கத்தில் கூறிய போது விரைந்து சென்ற சிலர் ஐந்து பெண்களையும் மடக்கி உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முத்தம்மாள் (38), மீனாட்சி (30), கவிதா (28), மங்கம்மாள் (35), முனியம்மாள் (35) என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்து மேலும் திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களா? என்பது குறித்தும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். உளுந்தூர்பேட்டையில் தண்ணீர் கேட்பது போல் வீட்டுக்குள் புகுந்து 10 பவுன் நகையை பெண் கும்பல் திருடிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.