சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்ட, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ஓடுபாதையில் ஓடும் போது திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால் விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, துரித நடவடிக்கை எடுத்ததால், விமானத்திலிருந்த 113 பயணிகள் உட்பட, 125 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த விமானம் இன்று ரத்து செய்யப்பட்டு, நாளை காலை மீண்டும், கோலாலம்பூர் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்துள்ளனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் செல்லும், மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று மதியம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் 113 பயணிகள் 12 விமான ஊழியர்கள் உட்பட 125 பேர் இருந்தனர்.
அந்த விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதை அடுத்து இந்த நிலையில் விமானத்தை வானில் பறக்க செய்தால் பெரும் ஆபத்து என்று கருதி, விமானத்தை ஓடுபாதை இல்லையே, அவசரமாக நிறுத்திவிட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, தகவல் தெரிவித்தார்.
இதை அடுத்து இழுவை வண்டிகள் வந்து, பழுதடைந்து நின்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை இழுத்துக் கொண்டு சென்று, விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்தப்பட்டது. விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக முயற்சி செய்தும், பழுதடைந்த இயந்திரங்கள் சரி செய்யப்பட முடியவில்லை.
இதை அடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் முதலில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தை பழுது பார்க்கும் பணி தொடர்ந்து நடந்தது. ஆனால் இயந்திரத்தின் உதிரி பாகங்கள், மலேசியா நாட்டிலிருந்து வர வேண்டியது இருந்ததால், இந்த விமானம் இன்று ரத்து என்று அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்த பயணிகள் அனைவரும், சொகுசு பேருந்துகளில் ஏற்றப்பட்டு, சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விமானம் நாளை வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து மலேசியா செல்ல இருந்த 113 பயணிகள் சென்னையில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இதற்கிடையே விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், விமானத்திற்கு ஏற்பட இருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டு, நல்வாய்ப்பாக 113 பயணிகள் உட்பட 125 பேர் உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.