கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து மர்ம நபர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி செயலாக இருக்கலாம் என்று போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்தது. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் நேற்று சனிக்கிழமை அதிகாலை முதல் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் பணிகள் நிறைவு பெற்று முதல் கட்டமாக சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை நேற்று இரவு 9 மணியளவில் தொடங்கியது.
டெல்லியில் இருந்து சென்னை வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், மெயின் லைனில் 10 கி.மீ. வேகத்தில் கடந்து சென்றது. இதன் பின்பு படிப்படியாக ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு வழக்கமான வேகத்தில் ரயில்கள் இயங்கும் என்றும் அதேபோல் ஆந்திரா மார்க்கத்தில் செல்லக்கூடிய பாதை நாளை காலை சரி செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கவரபேட்டை அருகே நடைபெற்ற ரயில் விபத்து மர்ம நபர்களால் நடத்தப்பட்ட நாசா வேலையாக இருக்கலாம் என்று ரயில்வே நிர்வாகம் சந்தேகித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கவரைப்பேட்டையில் 51 B சிக்னல் அருகே ஏற்பட்ட கோளாறால் விபத்து ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே இதே போல விபத்து ஏற்படுத்த முயற்சி செய்யும் வகையில் பொன்னேரி அருகே கடந்த மாதம் 21 தேதி 50B,51B,53B சிக்னல் உள்ள இடங்களில் ரயில் தண்டவாளத்தில் சேதம் நடந்துள்ளது.அது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஈடுபட்டு மர்ம நபர்களை கைது செய்யவில்லை.அந்த இடத்தில் கேமரா பொறுத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது.இந்த நிலையில் இந்த கவரைப்பேட்டை விபத்தும் அதே மர்ம நபர்களின் நாச வேலை காரணமாக நடந்து இருக்கலாம் என்று ரயில்வே நிர்வாகம் சந்தேகிக்கிறது. இந்த நிலையில் அது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.