சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தையொட்டிய பகுதியில் மைசூரு தர்பாங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 ஏசி பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது. இந்த நிலையில் மேலும் பல பெட்டிகள் தடம் புரண்டுள்ள நிலையில் அந்த விபத்து எப்படி நடந்தது? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து பீகார் தர்பங்காவுக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மைசூரில் இருந்து புறப்பட்டு பெங்களூர் வழியாக ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், செனனை சென்ட்ரல் வழியாக தர்பங்கா நோக்கி செல்லும்.
இந்நிலையில் தான் இந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இரவு திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது ரயில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.சரக்கு ரயில் நின்ற தண்டவாளத்தில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. நின்ற சரக்கு ரயில் மீது பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதியது. இதில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. பெட்டிகள் அருகே உள்ள தண்டவாளம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் தடம்புரண்டு தலைக்குப்புற கவிழ்ந்தன. 4 ஏசி பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.
சரக்கு ரயில் மீது மோதிய மைசூர் தர்பாங்கா எக்ஸ்பிரஸ்! தீப்பிடித்த பெட்டிகள்
இதையடுத்து பயணிகள் அலறியடித்தபடி ரயில் பெட்டியில் இருந்து வெளியே ஓடிவந்தனர். மேலும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், போலீசார், ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ரயில் பெட்டியில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்ட தகவலின் படி ரயில் பயணிகள் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மற்றபடி உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. தற்போது ரயில் விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. ஆனாலும் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.