வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்து வாடகை வீட்டிற்கு செல்பவர்களுக்கு மாத வாடகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 31ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 420-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர். மேலும் நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி இன்று தொடர்ந்து 16வது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சூரல்மலை பகுதியில் கனமழையால் சாலியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றைக் கடப்பதற்காக ராணுவம் அமைத்திருந்த தற்காலிக பாலம் வெள்ளத்தில் முழ்கியது. சூரல்மலை அருகேயுள்ள இருவழிச்சிப்புழாவில் மீண்டும் வெள்ளப்பெருக்கால் கால்நடைகள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன. இதனிடையே, நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு 1,505 பேர் 12 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 368 பேர் குழந்தைகள் ஆவர்.
இதனிடையே நிலச்சரிவில் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளவர்கள் வாடகை வீட்டிற்கு செல்பவர்களுக்கு மாத வாடகையாக ரூ.6 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், உறவினர்களின் வீடுகளுக்கு மாறுபவர்களுக்கும் இந்த தொகை வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.