Homeசெய்திகள்இந்தியாநீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒப்புக்கொள்ள வேண்டும்” - உச்சநீதிமன்றம் கண்டனம்..

நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒப்புக்கொள்ள வேண்டும்” – உச்சநீதிமன்றம் கண்டனம்..

-

- Advertisement -
நீட் தேர்வு
“நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒன்றிய அரசு அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

NTA (National Testing Agency) எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ( நீட்) நடத்தி வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. 24 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதாவது 56.41% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.2% தேர்ச்சி விகிதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேநேரம் இந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பரபரப்பு புகார்களும் எழுந்துள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 67 மாணவர்கள் 700க்கு 700 என்கிற முழுமதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்ததால், இது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்தது. அதிலும் ஒரே தேர்வறையில் தேர்வெழுதிய அடுத்தடுத்த பதிவெண்கள் கொண்ட 6 மாணவர்கள் முதலிடம் பிடித்திருந்ததும் சந்தேகத்திற்கு வலு சேர்த்தது.

நீட் தேர்வு

இந்தநிலையில் இந்த முறைகேடுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஹ்ஸானுதீன் அமானுல்லா ஆகியோர் இணைந்து விசாரித்தனர். விசாரணையின் போது “நீட் நுழைவுத் தேர்வில் 0.001% அலட்சியம்கூட இருக்கக்கூடாது என்றும், அதுபோன்ற அலட்சியம் இருப்பதாக தெரியவந்தால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மற்றம் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், நீட் தேர்வு எழுதும் மாணவர்களை உங்களின் கிளையன்ட் என்று நினைக்காதீர்கள், அவர்களிடம் விரோத போக்கும் வேண்டாம், இது மாணவர்கள் மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு இடையேயான மோதல் அல்ல என்றும் என்.டி.ஏவுக்கு அறிவுறுத்தினர். மேலும், நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒன்றிய அரசு அதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். இன்றைய விசாரணையில் தேசிய தேர்வு முகமைக்கு எந்த வாய்ப்பையும் வழங்காத நீதிமன்றம், இந்த வழக்கில் முக்கிய மனு ஜூலை 8ம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், மறு விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

 

 

MUST READ