வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.
சூரல்மலை, முண்டக்கை, அட்டமலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் வருவாய் ஆதாரங்களை இழந்துள்ள குடும்பங்களில் பெரியவர்களுக்கு நாள் ஒன்றுக்கு தலா ரூ.300 நிதி உதவி வழங்கப்படும் என்றும் இந்த நிதி அதிகபட்சம் 30 நாட்களுக்கு வழங்கப்படும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிதி உதவி 18 வயது முடிந்த 2 பேர் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நாளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார். நாளை காலை கண்ணூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் வாயிலாக வயநாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுகிறார். மேலும் நிவாரண முகாம்கள் மற்றும் மருத்துவமனையை பார்வையிட்டு, அங்கு தங்கியுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.