தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு! பகீர் ஆய்வு
ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டில் ஒரு கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 14.4 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது தமிழ்நாட்டில் சுமார் 80 லட்சம் பேர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, நீரிழிவு பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தில் உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை 10 கோடி பேருக்கு மேல் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக கோவாவில் 26 சதவீதம் பேருக்கும், குறைந்தபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 4 சதவீதம் பேருக்கும் நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்துள்ளது. புதுச்சேரியில் 26.3 சதவீதம் பேருக்கும் கேரளாவில் 25.5 சதவீதம் பேருக்கும் நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது. உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் உடல் பருமன் போன்றவையும் நீரிழிவுக்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் அபாயங்களை அதிகரிக்கிறது.
குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் நீரிழிவு நோய் பாதிப்பு 44 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டில் 70 மில்லியன் மக்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருந்துள்ளது. தற்போது இந்த அளவு 101 மில்லியனாக அதிகரித்துள்ளதாக இங்கிலாந்து மருத்துவ இதழான ‘லான்செட்’ இல் வெளியிடப்பட்ட ஐசிஎம்ஆர் ஆய்வு தெரிவிக்கிறது