ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 11 நாட்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
வரும் 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.இதில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் , அயோத்தியில் ராம்லாலா பிரதிஷ்டைக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த சுபநிகழ்ச்சிக்கு நானும் சாட்சியாக இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலி. கும்பாபிஷேகத்தின் போது இந்தியாவின் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த இறைவன் என்னை ஒரு கருவியாக ஆக்கியுள்ளார். இதை மனதில் வைத்து அனைத்து மக்களின் ஆசிர்வாதத்துடன் இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு வழிபாட்டைத் தொடங்குகிறேன், எனது உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது மிகவும் கடினம் என குறிப்பிட்டுள்ளார்.
அயோத்தியில் ராம் லல்லாவின் பிரான்-பிரதிஷ்தா விழாவிற்கான வேத சடங்குகள் முக்கிய விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஜனவரி 16 அன்று தொடங்கும். வாரணாசியைச் சேர்ந்த மதகுரு லக்ஷ்மி காந்த் தீட்சித், ஜனவரி 22-ஆம் தேதி முக்கிய சடங்குகளைச் செய்வார். ஜனவரி 14 முதல் ஜனவரி 22 வரை அயோத்தியில் அமிர்த மஹோத்சவ் கொண்டாடப்படும்.
ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பல அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது மற்றும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அழைப்பாளர் பட்டியலில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 7,000 விருந்தினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது இதில் 6,000 அழைப்பிதழ்கள் நாடு முழுவதும் உள்ள அழைப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.