மேற்குவங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதியது. டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ரங்காபாணி ரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கஞ்சன் ஜங்கா விரைவு ரயில், சிக்னல் கிடைக்காததால் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்குவங்கத்தின் சியால்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது அதே தண்டவாளத்தில் வந்த மற்றொரு சரக்கு ரயில் , கண்ணிமைக்கும் நேரத்தில், விரைவு ரயில் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 ரயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், ரயிலை ஓட்டிய லோக்கோ பைலட் உள்பட 5 பேர் உயிரிழந்ததாகவும் மட்டும் முதலில் உறுதிபடுத்தப்பட்டது. 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவர்களில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாலும், பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாலும் உயிர்ப்பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்பட்டது.
அதற்கேற்ப தற்போது பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலை மீறிசரக்கு ரயில் சென்றதாகவும், ரயில் மோதியதில் எக்ஸ்பிரஸ் ரயியிலின் கடைசி பெட்டி தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில்,”மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து கவலை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன. ரயில்வே அமைச்சர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.
PM @narendramodi has announced that an ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased in the railway mishap in West Bengal. The injured would be given Rs. 50,000. https://t.co/2zsG6XJsGx
— PMO India (@PMOIndia) June 17, 2024