கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 18 பேர் பார்வையிழந்த கொடுமை
ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டர் 18 பேர் சிகிச்சைக்கு பிறகு பார்வை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் அசோக் கெலாட்டின் சிரஞ்சீவி சுகாதார திட்டத்தின்கீழ் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்டோருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் சிகிச்சை பின் 18 பேரின் பார்வை பரிபோனதாக அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து அவர்களுக்கு மறு அறுவை சிகிச்சை செய்ததாக தெரிகிறது. ஆனால் பார்வை திரும்பவில்லை. மருத்துவர்கள் தரப்பில் எந்த தவறும்
நடக்கவில்லை என கண் மருத்துவ பிரிவுத்துறையின் தலைவர் தெரிவிக்கும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக துறை ரீதியிலான விசாரணை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரே உண்மையான காரணம் தெரியவரும்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் ஒருவர் கூறுகையில், “ஜூன் 23 ஆம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. ஜூலை 5 ஆம் தேதி வரை என்னால் நன்றாகவே பார்க்க முடிந்தது. ஆனால் 6 முதல் 7-ம் தேதி வரை படிப்படியாக பார்வை குறைந்து முற்றிலும் பார்வையை இழந்துவிட்டேன். அதன்பின் மறு அறுவை சிகிச்சை செய்தார்கள். ஆனால் பார்வை திரும்பவில்லை. நோய் தொற்றுதான் காரணம் என்கிறார்கள்” என்றார்.