இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2.61 லட்சம் பணியிடங்களை நிரப்ப மத்திய பாஜக அரசுக்கு 10 ஆண்டு காலம் போதவில்லையா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், இந்திய ரயில்வே துறையில் அனுமதிக்கப்பட்ட 14,63,286 கெஜட் அல்லாத பிரிவு பணிகளில் 2,61,233 பணியிடங்கள் காலியாக உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அதாவது 17.85 சதவீதம் அல்லது ஒவ்வொரு 6 பணியிடங்களில் ஒரு இடமும் காலியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பணியிடங்கள் ஏன் காலியாக உள்ளன? என்று கேள்வி எழுப்பியுள்ள ப.சிதம்பரம், காலிப்பணியிடங்களை நிரப்ப 10 ஆண்டுகள் போதவில்லையா? என்றும் விமர்சித்துள்ளார்.
நாட்டில் ஒருபுறம், மிகப்பெரிய வேலையின்மை உள்ளதாகவும், மறுபுறம் ரயில்வே துறையில் முறையான கண்காணிப்பும், மேற்பார்வையிடுதல் இல்லாததலும், ஒவ்வொரு வாரமும் விபத்துகள் நடைபெறுவதாகவும் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’ என்பதன் பொருள் இதுதானா? என கேள்வி எழுப்பியுள்ள ப.சிதம்பரம், மத்திய பாஜக வெறுமனே மோசமான மற்றும் திறமையற்ற நிர்வாகமாக திகழ்வதாகவும் விமர்சித்துள்ளார்.