கொசு விரட்டி மருந்தை சுவாசித்த 6 பேர் உயிரிழப்பு
டெல்லியில் வீட்டில் கொசு விரட்டி மருந்தை இரவு முழுவதும் சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியில் உள்ள சாஸ்திரி பார்க் பகுதியில் கொசு விரட்டி மருந்தை இரவு முழுவதும் சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், மச்சி மார்க்கெட் அருகே மசார் வாலா சாலையில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக சாஸ்திரி பார்க் காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறினர்.
மெத்தை மீது கொசுவர்த்தி சுருள் விழுந்து, அதில் ஏற்பட்ட புகையை சுவாசித்ததில் 6 பேரும் மூச்சிதிணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், கொசு விரட்டியை எரித்ததில் வெளியான கார்பன் மோனாக்சைடை சுவாசித்ததே உயிரிழப்புக்கு காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டில் மொத்தம் 9 பேர் இருந்த நிலையில், 2 பேர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஒருவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் நான்கு பேர் ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு சிறு குழந்தையாகும்.