
கேரளாவில் டியூசன் சென்ற 6 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஓயூர் பகுதியைச் சேர்ந்தவர் ரெஜி. இவருக்கு ஜோனாதன் என்கிற மகனும், 6 வயதில் சாரா ரெஜினா என்கிற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சாரா ரெஜினா, தனது அண்ணன் ஜோனாதனுடன் டியூசனுக்கு சென்றுள்ளார். அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்தபடியே , சிறுமியிடம் ஒரு பேப்பரை காட்டி இதை அம்மாவிடம் கொடுக்கலாமா எனக்கூறி பேச்சு கொடுத்துள்ளனர். உடனே வலுக்கட்டயமாக சிறுமியை காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். அப்போது காரின் கதவை பிடித்து இழுக்க முயன்ற ஜோனாதனையும் சிறிது தூரம் இழுத்துச் சென்றதால் அவர் கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக வீட்டுக்கு வந்து, தங்கை கடத்தப்பட்டதை சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தது கடத்தப்பட்ட காரை அடையாளம் கண்டு பிடித்தனர். அத்துடன் காரில் 3 ஆண்கள், ஒரு பெண் என 4 பேர் இருந்ததாக சிறுவன் அடையாளம் தெரிவித்திருந்ததால், கேரள மாநிலம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே சிறுமியின் தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பெண் ஒருவர், குழந்தை பாதுகாப்பாக இருப்பதாகவும், சிறுமியை விடுவிக்க வேண்டுமானால் ரூ. 5 லட்சம் தர வேண்டும் என்றும் கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார். பின்னர் மீண்டும் உறவினர்கள் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது எதிர்முனையில் பேசிய நபர், ரூ. 10 தயார் செய்து வைக்குமாறும், குழந்தைக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்றால் போலீஸுக்கு செல்லக்கூடாது என்றும், மீண்டும் நாளை காலை 10 மணிக்கு அழைப்பதாகவும் கூறியுள்ளார். இதனிடையே கடத்தலுக்கு பயன்படுத்திய காரின் பதிவு எண் போலியானது என்பது தெரியவந்துள்ளது.
மேலும், விசாரணையை துரிதப்படுத்தியுள்ள போலீஸார், குழந்தை குறித்த தகவல் தெரிந்தால் 112 என்கிற எண்ணுக்கு அழைக்கும்படி தெரிவித்துள்ளது. அத்துடன் குழந்தையை கடத்திய கும்பலைச் சேர்ந்த நபரின் வரைபடத்தையும் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் தவறு இல்லாத துரித விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் போலீஸ் டி.ஜி.பி-க்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனுடன் இதுகுறித்து தவறான தகவல்களை பரப்பக்கூடாது எனவும் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடத்தப்பட்ட குழந்தை விரைவில் கிடைக்க வேண்டுமென கேரள மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.