கர்நாடக மாநிலம் நெலமங்கலா அருகே கார் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியை சேர்ந்தவர் சந்திரம். இவர் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், சந்திரம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தனது மனைவி கெளராபாய் (42), பிள்ளைகள் தீக்ஷா (12), தயான் (16), ஆர்யா (2) மற்றும் கௌராபாய் சகோதரி விஜயலட்சுமி ஆகியோருடன் சொந்த ஊரான மகாராஷ்டிராவுக்கு சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர்.
தும்கூர் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்கலா தாலுகா பேகுரு என்ற பகுதியில் சென்றபோது, சந்திரம் காரின் மீது பக்கவாட்டில் சென்ற கண்டெய்னர் லாரி கவிழ்ந்து. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் சந்திரம், அவரது மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளிட்ட 6 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பல மணிநேரம் போராடி கண்டெய்னரை அகற்றி 6 பேரின் உடல்களையும் மீட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.