பெங்களுரில் நண்பர்கள் விடுத்த சவாலை ஏற்று பட்டாசு மீது அமர்ந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு பெங்களூரு கோணன்குண்டே பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சபரி (32 வயது). இவர் தீபவாளி பண்டிகையை ஒட்டி அங்குள்ள நெசவாளர் காலனி பகுதியில் இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசுகளை வெடித்துள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த நவீன் என்ற நபர், சபரியிடம் பட்டாசு வெடிக்கும் போது அதன் மீது அமர்ந்திருந்தால் ஒரு ஆட்டோவை பரிசாக வழங்குவதாக சவால் விடுத்துள்ளார்.
கூலி வேலைக்கு சென்றுவரும் சபரி ஆட்டோவிற்கு ஆசைப்பட்டு நண்பர்களின் சவாலை ஏற்று, அவர்கள் கொண்டுவந்த பெரிய பட்டாசு மீது அமர்ந்து கொண்டுள்ளார். அவரது நண்பர்கள் 6 பேரும் அங்கிருந்து தூரச் சென்றுள்ளனர். சில வினாடிகளில் அந்த பட்டாசு பயங்கர சத்தத்துடன் வெடித்த நிலையில் அதன் அதிர்வுகள் தாங்க முடியாமல், சபரி அதே இடத்தில் படுகாயங்களுடன் கீழே சரிந்து விழுந்தார்.
இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகிய நிலையில், படுங்காயம் அடைந்த சபரியை உடனடியாக அவரது நண்பர்கள் மீட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்றிரவு சபரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கோணன்குண்டே காவல் நிலையத்தில் பிஎன்எஸ் 108-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து சபரியின் நண்பர் நவீன் உள்ளிட்ட 6 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.