திருப்பதி மலைப்பாதையில் சிறுவனை கவ்வி சென்ற சிறுத்தை
திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதையில் நேற்று சிறுத்தை ஒன்று மூன்று வயது சிறுவனை கவ்வி சென்று காயப்படுத்தி வனப்பகுதியில் விட்டு சென்றது.
திருப்பதி மலை பாதையில் நேற்று (ஜூன் 22) இரவு மலைப்பாதையில் யாத்திரையாக பெற்றோருடன் நடந்து சென்ற சிறுவனை சிறுத்தை தூக்கி சென்று வனப்பகுதியில் விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே அச்சிறுவனை மீட்ட பெற்றோர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட வன அலுவலர் சதீஷ், “சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தாத வகையில் தேவஸ்தான விஜிலென்ஸ், போலீசார், வனத்துறை அதிகாரிகள் இணைந்து அங்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதோடு பக்தர்களை தனியாக செல்லாமலும் குழந்தைகளை பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கும்பலாக செல்லும்படி வலியுறுத்தப்படும். மேலும் சூரிய வெளிச்சம் உள்ள நேரத்தில் மட்டும் பக்தர்களை மலை பாதையில் நடந்து செல்ல அனுமதிக்கப்பட உள்ளது. சிறுத்தை எத்தனை நாட்களாக இந்த பகுதியில் சுற்றி வருகிறது என்பது ஆய்வு செய்து சிறுத்தை எந்த பகுதியில் உள்ளது என்பதை அறிந்து தேவைப்படும் பட்சத்தில் கூண்டு வைத்து அதனை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.