Homeசெய்திகள்இந்தியாதமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் - அதிமுக எம்பி தம்பிதுரை

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் – அதிமுக எம்பி தம்பிதுரை

-

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் – அதிமுக எம்பி தம்பிதுரை

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று அண்ணா சொன்னார். மாநிலங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்து, தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை இன்றும் நான் முன்வைக்கின்றேன் என அதிமுக எம்.பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

AIADMK MP M. Thambidurai speaks in Rajya Sabha

மாநிலங்களவையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் போது பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை, “நான் 5 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை துணை சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளேன். இந்த நாடாளுமன்றத்தில் 15 ஆண்டுகள் நான் பணி செய்துள்ளேன். இந்த அவையில் எங்கள் திராவிட இயக்க தலைவர் அண்ணா, திராவிட இயக்க உறுப்பினராக அமர்ந்து பேசினார். என் தலைவர் புரட்சித் தலைவி அம்மா, தனது ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் சேர்த்து 50 உறுப்பினர்களை 2014ல் அனுப்பி சாதனை படைத்தார். அண்ணா இந்த அவை உறுப்பினராக இருந்தபோது, மொழி பிரச்சனைக்காக குரல் கொடுத்தார்.

தமிழை நாட்டின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று சொன்னார் அண்ணா. அது எப்போது நடக்கும் என்று எங்களுக்கு தெரியவில்லை. 1967 முதல் தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆட்சிக்கே வரமுடியவில்லை, திராவிட கட்சிகள் தான் ஆட்சி செய்து வருகின்றன. ஈ.பி.எஸ் அவர்கள் முதல்வராக இருந்தபோது, மாநிலத்திற்கு அதிக நிதி கோரியிருந்தார். ஆனால் அதை மத்திய அரசு தரவில்லை. அதை தாண்டியும் 4 ஆண்டுகள் அவர் சிறப்பாக ஆட்சி செய்தார். நாங்கள் இங்கு குறைந்த உறுப்பினர்களை கொண்டிருந்தாலும், காவிரி பிரச்சனை, கட்சத்தீவு பிரச்சனைக்காக குரல் கொடுத்து வருகிறோம். நாடாளுமன்ற அனுமதி பெறாமல், காங்கிரஸ் உறுப்பினர்கள் கட்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார்கள். எங்கள் அம்மா உச்சநீதிமன்றம் சென்று போராடினார். இது மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனையாக உள்ளது.

AIADMK MP M. Thambidurai speaks in Rajya Sabha

கொரோனா காலத்தில் பிரதமர் மோடி சிறப்பான திட்டங்களை கொண்டுவர, அப்போது முதல்வராக தமிழகத்தில் இருந்த ஈ.பி.எஸ் இன்னும் சிறப்பான திட்டங்களை அமல்படுத்தினார். இந்த நாடாளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் இது நம் இந்தியர்களின் உழைப்பில் கட்டப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தை கட்டியதற்காக பிரதமர் மோடியை நான் பாராட்டுகிறேன். 75 ஆண்டுகள் பல ஏற்ற, இறக்கங்களை கண்டுள்ளோம். ஆனாலும், இப்போதும் மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், மாநில மொழிகளை ஆட்சி மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை மீண்டும் இந்த தருணத்தில் நான் முன்வைக்கின்றேன். என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா என்னை வாஜ்பாய் அரசில் மத்திய அமைச்சராக அமர வைத்தார்கள். இப்போதும் என்னை நாடாளுமன்ற உறுப்பினராக ஈ.பி.எஸ் அவர்கள் நியமித்திருக்கிறார். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

MUST READ