கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கவுள்ள நிலையில், ஒரே துறையை அனைத்துக் கட்சிகளும் கேட்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆளும் பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 தொகுதிகளில் மட்டுமே தனித்து வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 272 உறுப்பினர்கள் தேவை என்கிற பட்சத்தில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 236 இடங்களை மட்டுமே கையில் வைத்துள்ளது. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளைக் கொண்டுள்ளது.
ஆகையால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் என்.டி.ஏ கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதீஷ் குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கிங்மேக்கர்களாக மாறியுள்ளனர். அவர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக ஆட்சியமைக்க முடியும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் முக்கியத் துறைகளை கேட்டு நிபந்தனை விதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அந்தவகையில் நிதித்துறை, போக்குவரத்து, வேளாண்மை, ஊரக வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் ஐ.டி., போன்ற துறைகளை கேட்டுவருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக வேளாண் துறையை மட்டும் 3 கட்சிகள் கேட்டு வருகின்றன. தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா கட்சிகள் ஏற்கனவே வேளாண் துறையை கேட்டு வரும் சூழலில், 2 எம்.பிக்களை மட்டுமே கொண்டுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமியும் அதே துறையை கேட்டு பாஜகவுக்கு நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நெருக்கடியான சூழலை பாஜக எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என அரசியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.