சிறையில் இருந்து இடைக்கால ஜாமினில் வெளியே வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று மாலை தொடங்குகிறார்.
டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு மே 03ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் தேர்தல் என்பதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவித்தனர். ஆனால் ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. ஜூன் 1 வரை கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்த நிலையில், சிறையில் இருந்து இடைக்கால ஜாமினில் வெளியே வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று மாலை தொடங்குகிறார். தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னதாக இன்று காலை 11.30 மணி அளவில் டெல்லியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். இதனை தொடர்ந்து பிற்பகல் 1 மணி அளவில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார். மாலை 5.30 மணிக்கு தெற்கு டெல்லியில் நடைபெறும் ரோடு ஷோவில் கெஜ்ரிவால் பங்கேற்று தேர்தல் பிரச்சாரம் தேற்கொள்கிறார்.