டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (செப்.13) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயர் மற்றும் பிஎஸ்ஆர் கட்சியைச் சேர்ந்த கே.கவிதா ஆகியோருக்கு பின்பு அரவிந்த் கேஜ்ரிவால் ஜாமீன் பெற்றுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் 21 மார்ச் 2024 -ல் முதன்முதலாக கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறையின் காவலில் இருக்கும் போதே, கடந்த ஜூன் 26-ம் தேதி சிபிஐ-யும் அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தது.
இதனிடையே, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜுலை 12-ம் தேதி அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. என்றாலும் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டிருந்ததால் அவர் தொடந்து திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை அடுத்து தனக்கு ஜாமீன் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் ஏற்கெனவே நடைபெற்று முடிந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு அர்விந்த் கேஜ்ரிவால் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 5-ம் தேதியன்று ஒத்திவைத்தது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற செப்டம்பர் 13-ம் தேதி விசாரணைக்கு வரும் வழக்குகளின் பட்டியலில் அர்விந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவும் இடம்பெற்றிருந்ததது. இந்த நிலையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று (செப்.13) உத்தரவிட்டுள்ளது.
6 மாத காலம் அவர் சிறையில் இருந்து வெளியே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜாமின் நிபந்தனைகள்,
கெஜ்ரிவால் 10 லட்சம் பிணைத்தொகை கட்ட வேண்டும்.
இந்த வழக்கு தொடர்பாக பொதுதளத்தில் பேசக்கூடாது.
கீழமை நீதிமன்றத்தில் விலக்கு அளிக்காத பட்சத்தில், நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும்.